Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

காலம் எழுதிய வரிகள்

--------------------------------------------------

உள்ளே...

பதிப்புரை

* காசி ஆனந்தன்

ஆடடா களத்தே.... 1

நாம் மறப்பதில்லை! 2

*முருகையன்

தற்கொடை 4

*தா.இராமலிங்கம்

உங்களுக்குக் கேட்கவில்லையா? 8

*சோ.பத்மநாதன்

பாலாய் நிலவு பொழிகிறது! 10

உன்னி உன்னி. 13

*புதுவை இரத்தினதுரை

பள்ளிக்குப் போன பிள்ளை ஏன் வரவில்லை 14

கூற்றுவனைத் தூக்கிலிடு 17

*அல்லை க.வ.ஆறுமுகம்

இந்தப் 'பளு'வை உணர்ந்தீரா? 20

* பஞ்சாட்சரம்

வாருங்கள் ! மாந்துங்கள்! வாழ்த்துங்கள்! 22

* ப.அறிவுடைநம்பி

கொடி பறக்குது கோட்டையில்! 24

* வீ.பரந்தாமன்

அறத்தின் ஒருவடிவோ? 25

*மு.வே.யோ.வாஞ்சிநாதன்

தாய்த்தமிழின் மண்! 28

*கல்வயல் வே.குமாரசாமி

பெறுமானம் அல்லது நம்மைப்பற்றிய சுய விமர்சனம் 29

*நாவண்ணன்

இவனா என் பிள்ளை! 31

*சாருமதி

இருவர் பாடல் 33

*நவாலியூர் நடேசன்

அஞ்சலி! 35

*எஸ்.ஜி.கணேசவேல்

இப்படியும் மரணவீடுகள் 37

*சு.வி

சூரிய நமஸ்காரம் 39

*இ.ஜெயராஜ்

தாகம் தீர்ப்பாள் நாகபூஷணி! 41

*வளவை வளவன்

புதுக்கீதை பிறக்குது ஈழத்திலே! 43

*நிலா தமிழின்தாசன்

வான் முகிலே! அழுவது ஏன்? 44

*கோப்பாய் சிவம்

விடைகொடு! 46

*ஜெ.கி.ஜெயசீலன்

கௌதம புத்தருடன் - ஒரு கவிதா நேர்காணல் 48

*கி.பி. அரவிந்தன்

இனி 50

* சி.கருணாகரன்

தேசத்தின் விருட்சம் 52

* வவுனியா திலீபன்

இனியும் துயிலோம் 54

* சத்தியவசனம்

நத்தார் விசனம் 56

* மைதிலி அருளையா

ஒவ்வொரு காலையிலும்..... 60

* த.றெஜ“ந்திரகுமார்

நானுங்கூட..... 62

* K. பாபு

தளிர் 64

* நாக.சிவசிதம்பரம்

நிழல் போதும் என்றால்..... 65

* தெல்லியூர் ஜெயபாரதி

உன் மரணம் மனதில் எழுதிய கவிதை 66

* எஸ்.உமாஜிப்ரான்

கீழ்த்திரையின் முகம் நோக்கி..... 68

* மீரா

விழ விழ எழுவோம்! 70

* வினோதினி

எங்கே போனீர்கள்? 71

* நிதர்சன்

ஒரு நெய்தல் 73

* இ.சிவாந்தினி

சந்தோசம் அதிகம் 76

* நாமகன்

அழைப்பு 77

* பாண்டியன்

உடன் வரவும்! 79

* செ.மகேந்திரன்

பகை தொலைத்து நீதி காப்போம்! 80

* இயல்வாணன்

இடைவெளிகள் 82

* கப்டன் கஸ்தூரி

இறப்பற்றோர்! 85

* மேஜர் பாரதி

என் தேசமே! 90

* நாமகள்

விடியல்வரை தொடருமா.....? 92

* கௌதமி

அன்னை நிலம் 94

* இராஜி சண்முகநாதன்

நல்லதொரு விடுதலை நாமினிக் காண்போம்! 97

* கி.சிவஞானம்

உயிர்ப் பொருள் 99

* முருகு இரத்தினம்

உனக்கேன் அச்சம்! 101

* ஆதிலட்சுமி இராசையா

அம்மா நீயும் அழுவதை நிறுத்து! 103

* மா.மயிலன்

ஒத்திகை 104

* தூயவள்

எப்படிச் சாத்தியமானது......? 105

பதிப்புரை

தேசிய இன இடுக்குமுறை- விடுதலைப் போராட்டம் சார்ந்த வாழ்வனுபவங்களை வெளிப்படுத்தும் வெவ்வேறு கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து நூலுருவில் வெளியிடுதல், காலப்பொருத்தமான பணியெனக் கருதினோம்.

ஏற்கெனவே இவ்வாறான தொகுப்பு நூல்கள் சில 1985 இன் இறுதிப்பகுதிவரை வெளிவந்துள்ளபோதிலும், அதன் பின்னர் அத்தகைய முயற்சியேதும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, 1986 தைமாதத்தைத் தொடக்கமாகக் கொண்டு, 1993 ஆவணிவரை எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்பட்ட / பிரசுரிக்கப்படாத கவிதைகளைத் தொகுக்கத் தொடங்கினோம். பத்திரிக்கை விளம்பரங்கள் மூலமும், நேரிலும் எமது தேடலிலும் பெற்றவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் இரண்டு தொகதிகளாக வெளியிடப்படும். காலம் எழுதிய வரிகள் என்ற பெயரிலான அதன் முதற்றொகுதியை இப்போது கைகளில் தந்துள்ளோம்.

தமிழீழத்தின் மூத்த கவிஞர்களான காசி ஆனந்தன், முருகையனிலிருந்து தெல்லியூர் ஜெயபாரதி ஆகிய இளங் கவிஞர்வரையிலான 51 கவிஞர்களின் கவிதைகள், இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன; 13 பெண்கவிஞர்கள்- 19 இளங்கவிஞர்கள் - 3 மாவீரர்கள் இதில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் - சமூக மெய்ம்மைக்கும் கவிதா நேர்த்திக்கும் தெரிவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளபோதும், தேவை கருதி சில இடங்களில் நெகிழ்ச்சிப் போக்கையும் கடைப்பிடித்துள்ளோம்.

சமூகப் பொறுப்போடு தமது கவிதைகளைத் தந்து ஒத்துழைத்த அனைத்துக் கவிஞர்களக்கும் எமது முதல் நன்றி.

அத்துடன், கவிதைகளை தேர்வுசெய்து தொகுத்தும் பணியைச்செய்த அ.யேசுராசா அவர்களுக்கும் தமிழ்த்தாய் வெளியீட்டகம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

பத்திரிக்கைத் தொகுதிகளைப் படித்துப்பார்க்க வசதிசெய்து தந்த யாழ். பல்கலைக்கழக நூலகர், 'ஈழநாதம்' நிர்வாகப் பணிப்பாளர்; கவிதைகளைத் தெளிவான கையெழுத்தில் பிரதிசெய்து உதவிய இளந்திரையன், முன்புற அட்டையை வடிவமைத்த ஒலிவர் ஆகியோருக்கம் எமது நன்றிகள்.

தமிழ்த்தாய் வெளியீட்டகம்.

__________________

ஆடடா களத்தே......

காசி ஆனந்தன்

பத்துத் தடவை பாடை வராது

பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா

செத்து மடிதல் ஒரேஒரு முறைதான்

சிரித்துக் கொண்டே செருக்களம் வாடா!

முத்தமிழோடு மோதினார் பகைவர்

முடங்கிக் கிடப்ப தென்ன நீதி

குத்தும் கணைகள் குண்டுகள் வரட்டு ம

குருதி பெய்யடா! கொட்டும் முரசே!!

ஆற்றல் அடையாய்! ஆண்மைத் தமிழனே

அடநீ என்னடா அடங்கி நின்றனை

சோற்றுப் பானையும் நாமும் ஒன்றோ?

சும்மா வயிறு நிரப்பவோ வந்தோம்?

மாற்று வீரன் மருளத் தமிழன்

மானப்போர் செய்திட மாட்டானோ?

நாற்றிசையும் நடுங்க எழடா!

நடந்துபோ செங்குருதி நடுவிலே!

அன்னைத் தமிழோ அழுது கிடந்தார்!

அருந்தமிழ் நாடோ அழுந்திக் கிடந்தது

முன்னைச் சேர சோழ பாண்டியர்

மூச்சு முடிந்து போச்சோ தமிழா?

உன்னைத் தமிழனாகப் பெற்றாள்

ஊட்டி வளர்த்த முலைப்பால் எங்கடா?

தென்னைக் குலைகள் என்னப் பகைவர்

சென்னி திருகடா! செருவில் எழுகவே!

விடுதலை என்ன மலிவு விலையோ?

வீதிக்கடையில் விற்பனைக் குண்டோ?

புடலங்காயோ விடுதலை? போடா!

போர்க்களம் ஆடப்போ! அதுகிடைக்கும்!

கொடுவிலையாகக் குருதியும் ஆவியும்

கொடடா உன்தலை ! கொள்க விடுதலை!

அடநாம் மானத் தமிழர் அல்லவோ!

ஆளப் பிறந்தோம்......ஆடடா களத்தே...!.

ஈழநாதம்

20.7.1990

நாம் பறப்பதில்லை!

காசி ஆனந்தன்

மட்டுநகர் அம்பாறைத்

தமிழீழ மண்ணில்

கொட்டுண்ட தமிழீழக்

குருத்துக்களை அந்தக்

கட்டழகு மேனிகளைக்

களம் கண்ட வேங்கைக்

குட்டிகளை எந்தமிழர்

குலம் பறப்பதில்லை!

எங்கள் படுவான் கரைக்கும்

எழுவான் கரைக்கும்

பொங்கி வளர் பசுமரங்கள்

பொலிந்த நெடுங்காடாம்

எங்கள் தென் தமிழீழ

எல்லைக்கும் காவல்

தங்களுயிர் ஈந்தளித்தார்

தமை மறப்பதில்லை!

பெற்றோரை உதறியவர்

பெரிய உடன் பிறப்பைச்

சுற்றத்தை உதறியவர்

சுகத்தை உலகத்தின்

பற்றையெல்லாம் உதறியவர்

பைந்தமிழ் மண் வாழ

உற்ற உயிர் உதறியதை

உளம் மறப்பதில்லை!

காரை முள் குத்திச் செந்

நீர் கனிந்த கால்கள்

பேரலைக் கடற் தோணி

பிய்த்தெடுத்த இடுப்பு

போராடிச் சிறு குண்டு

புதைந்த இளந் தோள்கள்

வீர விடுதலைப் புலியை

விழி மறப்பதில்லை!

எந் தமிழர் வீடுகளை

எரித்த கொடும் படையை

நொந்த தமிழ்ப் பெண்களுடல்

நொடித்த விலங்கினத்தை

செந்தமிழர் குலமழித்த

சிறுக்கர்களை ஆவி

தந்தழித்த புலிகளுயிர்

தமை மறப்பதில்லை!

கண்ணாச் செடிப் பற்றைக்

காட்டிலே கிடப்பார்

உண்ணச் சோறில்லாமல்

உடும்பைப் போய்ப் பிடிப்பார்

புண் வாயில் மருந்தின்றிப்

புகையிலையை வைப்பார்

மண் வாழ மடிந்தாரை

மனம் மறப்பதில்லை!

புலி பாய்ந்த கல்லினிலே

போர் செய்த நினைவும்

வலியுடைய கிரான் சுற்றி

வளைப்புடைத்த நினைவும்

களிமிக்க தாண்டியடிக்

கண்ணிவெடி நினைவும்

எழும் நெஞ்சம் புலிவழியில்

எழ மறப்பதில்லை!

கட்டறுந்த தமிழீழம்

காண வெறிகொண்டு

கொட்டமிட்ட பகை அடித்தும்

கொடிய நஞ்சுண்டும்

மட்டுநகர் நஞ்சுண்டும்

மட்டுநகர் அம்பாறை

மறப்புலிகள் கூட்டம்

நட்ட புகழ் வரலாற்றை

நாம் மறப்பதில்லை!

தற்கொடை

முருகையன்

வள்ளுவரை நேற்று வழியிலை

கண்டேன் நான்

வீட்டுக்கழைத்தேன்

விறாந்தைக் கதிரையிலே

வந்திருந்து கற்றே மனந்திறந்து

பேசினார்.

ஆயிரத்து முந்நூற்று முப்பது

அருங்குறளும்

பாயிரத்தோடு பகர்ந்தீர்கள்,

வள்ளுவரே!

பின்னர் எதுவும் எழுத

நினைந்ததுண்டா?

சொன்னால் மிகவும் சுவையாய்

இருக்குமே!

இப்படி நான் கேட்டேன்;

இவரோ சிரிக்கின்றார்.

ஆற்றல் மிகுந்த அறிஞன் என்று

தான் என்னை

நானே கருதி நயந்து கொண்டு

வானுறையும்

தெய்வத் திரளின் இடையே

செருக்குடனே

தங்கி இருந்தேன்.

தமிழ்க்குலத்துச் செய்திகளை

ஆர்வமுடன் கேட்பேன் நான்

ஆகாய ஓசையிலே!

தாயகச் செய்தி தவற

விடமாட்டேன்.

ஏதேதோ எல்லாம் எடுத்து

விரிவாகப்

பேசினார் அந்தப் பெரிய

தமிழ்ப் புலவர்.

"முப்பால் தயாரித்து முன்பெமக்குத்

தந்தீர்கள்;

இப்பால் பருகுங்கள்" என்றேன்

இசைந்தெடுத்துப்

பாலைப் பருகிப் பரிவோடு

பேசுகிறார்.

"இல்லாப் பொருள் குறளில் இல்லை

என்று நான் இருந்தேன்."

"மெய் தானே அய்யா!"

"வீடு தம்பி, வீண் முகமன்."

"ஏனய்யா?"

"தம்பி, இந்த ஈழத்தமிழகத்தில்

காலை வைக்கும் மட்டும் தான்

அந்தக் கருத்தினை நான்

கொண்டிருந்தேன்."

"பின்னர்?"

"குறள்கள் புதியனவாய்ச்

செய்யத் தொடங்கி விட்டேன்."

"செய்தீரா, வள்ளுவரே?

புத்தம் புதிய குறள்கள்

புனைந்தீரா?

காட்டுங்கள் அய்யா;

நான் கற்கத் துடிக்கின்றேன்."

சுத்த வெள்ளைத் தாளின்

சுருளொன்றைக் காட்டினார்.

"பத்துப் பத்தாகப் பல குறள்கள்

யான் இயற்றி

வைத்துள்ளேன்" என்றார்.

"வழங்கி அருள்க" என்றேன்.

"எல்லாம் தருதல் இயலாது;

கேட்டு விட்டாய்;

பத்துக் குறளைப் பரிசாய்த்

தருகின்றேன்-

இந்தா பிடி" என்றார்.

இன்னும் ஒன்று சொல்லுகிறார்.

-"தற்கொடை என்னும்

தலைப்பில் எழுதியுள்ளேன்;

தற்கொடை என்றால், தன்னுயிரை

மக்களுக்காய்

ஈதலே ஆகும்;

இதனை விளக்கியுள்ளேன்"

என்றார் புலவர்.

எழும்பி மெல்ல அப்பாலே

சென்றார்.

மறைந்தார்.

சிறந்த குறள் பத்தும்

இங்கே சரியாய் எழுதியுள்ளேன்

- பாருங்கள்

அந்தப் புதிய அதிகாரம்

காணுங்கள்.

2

தற்கொடை என்ப, தமிழீழ

மைந்தர்கள்

நிற்கும் புதிய நிலை.

தன்னுயிரைத் தான் ஈயும்

சான்றான்மை தற்கொடையாம்

என்ன நிகர் ஆகும் இதற்கு?

ஓர்ம உரமும் துறவும்

உறுதியுமே

கூர்மதியோர் ஆவிக் கொடை.

கற்கண் டினிது பழங் கள்இனிதே.

என்பார்கள்

தற்கொடையின் தன்மை தெரியார்.

ஆவி கொடுக்கும் அசையாத்

திடம் கொண்ட

வாலிபர்கள் வாழ்வதிந்த மண்.

சொந்த மண் மீளச் சுடுகலன்கள்.

ஏந்திடுவோர்

தந்திடுவார் தங்களுயிர் தாம்.

நஞ்சைக் கழுத்தில் நகையாய்

அணிவோரின்

நெஞ்சம் நிரம்ப நெருப்பு.

வெங்கொடுமைச் சாவும் விளையாட்டுக்

கூடமாம்

பொங்கு சினம் கொண்ட புலிக்கு.

அச்சம் அறியார்; அடங்கார்;

அவர்க்குயிரோ

துச்சம்; எதிரி வெறுந் தூள்.

கொல்லோரை மோதிக் கொடுபட்ட

இன்னுயிரை

எல்லா உலகும் தொழும்.

3

தாடித் தமிழர் - உண்மைச்

சாரத்தை நல்ல குறட்

சாடியிலே தேக்கி வைக்கும்

தந்திரத்தைக் கையாளும்

மோடி தெரிந்த முனிவர்

மறை மொழியில்

ஓடும் தெளிவை உணர்ந்து

பயன் பெறுவோம்.

வள்ளுவரே எங்கள் வழிகாட்டி

நம்மவரின்

உள்ளமிசை ஊரும் ஒளி!

உங்களுக்குக் கேட்கவில்லையா?

தா. இராமலிங்கம்

உங்களுக்கு கேட்கவில்லையா?

சிறீலங்காச் சிறைகளிலே

எமது இளைஞர்

உண்ணாமல் நோன்பிருந்து

உடல்வற்றி உலர்ந்து ஒடுங்க

உள்ளம் மினுங்கி

உதித்த நிலவொளியில்

விழித்து எழுங்கோ என்று

கூவி அழைத்த குரல்

இங்கு எம்மைத்

தட்டி எழுப்புகுதே!

உங்களுக்குக் கேட்கவில்லையா?

முற்றுகை சுட்டெரிப்பு

சிறைபிடிப்பு எல்லாம்

தமிழ் இனத்தை முடமாக்கி

இருந்து அரக்க வைக்கும்

திட்டமிட்ட சூழ்ச்சிச்

செயற்பாடு அல்லவோ?

அவர்கள் கேட்கிறார்கள்:

"எங்களை நீங்கள் மறந்துவிட்டீர்களா

எங்களை உங்களுக்கு

அடையாளம் தெரிகிறதா?" என்று.

உங்களுக்குக் கேட்கவில்லையா?

மரண தேவதைகள் சூழ்ந்து

மலர்தூவி

மங்களம் பாடி வாழ்த்த

சிறைக்கம்பி பாடி வாழ்த்த

சிறைக்கம்பி தாவிச்

சிறகடித்து வந்த குரல்

எமைஇங்கு

தட்டி எழுப்புகுதே!

அவர்கள் கேட்கிறார்கள்:

"உங்களை நீங்கள் மறந்துவிட்டீர்களா?

உங்களை உங்களுக்கு

அடையாளம் தெரிகிறதா?" என்று.

உங்களுக்குப் புரியவில்லையா?

ஏரிவளர்ந்த இளங்காளை மாடுகள்

பாரம் இழுத்து வருவதைப் பாருங்கோ!

லாடன் கட்டிய கால்களைத் தூக்கி

வேகமாய் நடப்பதைப் பாருங்கோ!

கப்புகள் வளைகள் கம்புகள் திடுகுகள்

முன்வந்து உதவிடும் மக்களைப் பாருங்கோ!

அவர்கள் அழைக்கிறார்கள்:

"வாருங்கள்

மாண்டுபோன எம் மண்ணினை மீட்டிட

உழைப்பு யாவையும்

ஒருமுகப் படுத்துவோம்."

உங்களுக்குக் கேட்கவில்லையா?

அலை

புரட்டாதி 1986

பாலாய் நிலவு பொழிகிறது!

சோ. பத்மநாதன்

பாலாய் நிலவு பொழிகிறது- பௌர்ணமிநாள்!

ஓராயிரம் நினைவு நெஞ்சில் அலைமோத

பாலாய் நிலவு பொழிகிறது.....

முன்னாள் இதுபோல் முழுநிலவில் முற்றத்து

தென்னை முழுகுகையில் தென்றல் அதைத் தாலாட்டும்

தூரத்தே ஊதும் சுருட்டி மிதந்து வரும்!

ஈரமண்ணில் இரு கால் புதைய நெடு

நேரம் கழியும் நினைப்பே இலாது,

கடல்

ஓரம் கை கோத்தே உலாவருவோம்!

மேலே வான் நீல விதானம் விரிக்கும்!

வின்மீன்களோ கோலம் இடும்!

ஓலைக் குடிசையிலே,

தென் மோடி ஆட்டுவிக்கும் அண்ணாவி பாடல்,

உடுக் கொடு

போட்டுலுப்பும் சாமப் பொழுது.

பாலாய் நிலவு பொழிகிறது பௌர்ணமிநாள்!

திங்கள் மூன்றாக சிறிதும் பிழையில்லை

எங்கள் பயிர்பச்சை எல்லாம் கருகுகையில்

வானத்தை நோக்கிக் கழுத்து மிகவலித்துப்

போனதே அன்றிப் புதினம் எதுவுமில்லை!

நீர் வேணும் இந்த நிலம் "தோண்டவல்ல பல ஆள் வேணும்"

- கூவி அழைக்க,

இளைஞர் சிலர் ஆயுதங்கள் ஏந்தி வந்தார்!

"நீர் கண்டலாது, இனி நாம் ஓயுறதே இல்லை!"

ஒரு சூள் உரைத்தார்கள்!

அண்டை அயலார் அலவாங்கொடு பாரை

கொண்டு வந்தார் சோற்றுப் பொதியும் அனுப்பிவைத்தார்.

'ஆகா இவர்கள் போல் ஆர் வருவார்" என்றுருகி

வீதியெல்லாம் வாழை நட்டுத் தோரணமும் தொங்கவிட்டு

வாசல் தோறும் பூரண கும்பம் வடிவாக வைத்து

வரவேற்றோம்!

வானத் திருந்(து) அமரர் வந்தது போல் பூரித்து

மோனத் திருந்தோம் முழுசாய் ஒருமாதம்!

ஊர்திகளில் ஏற்றி ஊர்வலங்கள் செய்வித்தோம்!

பார் முழுதும் பார்க்கப் பவனிவந்தோம்!

அந்தரத்துத் தேவர் ஒரு நாள் அசுரர்களாய்

தொந்தரவு செய்யத் துணுக்குற்றோம்!

நாடொன்று கேட்ட தமிழர் குடியிருக்க

வீடொன்றும் இல்லாமல் விதைத்தார்கள் குண்டுகளை

ஆடுபலி, கோழிபலி, ஐயோ அணிகலனும்

வீடுகளும் காவு கொடுத்து விதிர்விதிர்த்தோம்!

நாடு புகுந்தெங்கள் மானம் விலை கேட்டார்.

தண்­ருக்காகத் தவமிருந்த மனிதர்களைக்

கண்­ர்க் கடலாட விட்டுக் கதையளந்தார்!

நீர் காண, முன்பு முயன்ற இளைஞர்களை

ஊர் தோறும் தேடி உழக்கி வதைத்தார்கள்.

பொய்யை மெய்யாகப் புனையும் முயற்சியிலே

வையம் முழுதும் வலம்வந்து பார்த்தார்கள்!

அசுரர்களை ஏவி அநியாயம் செய்வித்தார்!

நிசியிற்களவு, கொலை, நிட்டுரம் !- அம்மமா!

மூன்றாம் பிறை நம் முருங்கை மரத்தடியில்

தோன்றுது போய்க் கூடி தொழுகை நடத்துங்கள்!

நாலாம் பிறை கண்டு நாய்படாப் பாடுபட்டோம்!

ஓலமிட்டோம், கண்­ர் உகுத்தோம்

ஒரு நாளில்,

சூறாவளியால் சுழன்று முருங்கைமரம்

பாற, நமது பகைவர் மறைந்தார்கள்!

இன்று,

பாலாய் நிலவு பொழிகிறது - பௌர்ணமிநாள்!

மீண்டும் இளைஞர் மிடுக்காய்த் தொடங்கினார்

தோண்ட-ஒரு சிறிதும் சோம்பல் அறியாதார்!

ஆழத்தே பாறை பிளக்கும் ஒலி அவ்வப்போ (து

ஈழம் முழுதும் எதிரொலித்துக் கொண்டிருக்க

உண்ட களையில் உறக்கம் கலையுதென

மிண்டர் சிலபேர் விசனம் அடைந்து,

ஒன்று கூடி ஒரு திட்டம் கொண்டு வந்தார்!

"நம்மை இவர் மீறி இது செய்ய விட்டால்....?

வரும் மோசம்!

தாமே பெறுவதுவோ தண்­ர்?

நாமில்லாமல் ஆமோ ஒரு வாழ்வு?

அதனை உணர வைப்போம்!

ஆற்றை மறித்தால்.....?

அவர்கள் கிணற்றில் நீரூற்றும் கிடைக்கா(து)!"

உறுதி செய்து கொண்டார்கள்!

பச்சைப்பயிரும் பயன்மரமும் தோப்புகளும்

உச்சி கருகி உயிரூசல் ஆடுவதும்

கோயில் குளம் கூட குண்டுக்(கு) இலக்காகி

தீயில் கருகுவதும் கண்டிரங்காச் சென்மங்கள்!

பொழிகின்ற குண்டுகளால் மக்கள் உடல்சிதறி

அழிகின்ற பொல்ல அவலம் இயற்றுபவர்!

கொடுமைக்கு முன்னே குனிந்து நடுங்காமல்

அடிமைத் தளையை அறுத்தெறிய வேண்டாமோ?

தென்னை பனைகள் சிதறுண்டு போனாலும்

என்ன? - அதனால் இடிந்துபோய் உட்கார்ந்தெம்

ஏலாமை சொல்ல இது நேரம் அல்ல!

இன்று பாலாய் நிலவு பொழிகிறது பௌர்ணமிநாள்!

மீண்டும் எமது நிலத்தில் பனை வடலி

தோன்றி அண்ணாவி முழங்கும் உடுக்கின் ஒலி

நீண்ட இரவுப் பொழுதில் நிகழட்டும்!

ஊதும் குழல்பெய் சுருட்டி இனி இரண்டு

காதும் அமுதம் பொழிக!

கடலோரம்,

ஈர மணலில்

இனி நாம் நடக்கலாம்!

பாலாய் நிலவு பொழிகிறது

- பௌர்ணமிநாள்!

வெளிச்சம்

கார்த்திகை - மார்கழி 1991.

உன்னி உன்னி.....

சோ. பத்மநாதன்

உன்னி உன்னி உழக்குகிறாய்

உர் ஊராகச் சுற்றுகிறாய்

சின்னப் பெண்ணே உன்னால் நம்

தேசம் நிமிரப் போகிறது!

உன்னைச் சுமந்து பெற்றாளை

உயிராய்க் கருதி வளர்த்தாளை

பின்னால் இருத்தி சைக்கிளிலே

பிய்த்துக் கொண்டு போகின்றாய்!

அண்ணன் அயல்நாடு அலைகின்றான்

அப்பன் 'ஷெல்'லால் அடியுண்டான்

பெண்ணே நீயோ இங்கிருந்து

பெரிய சுமைகள் சுமக்கின்றாய்!

என்ன என்ன அவசரமோ!

என்ன என்ன நெருக்கடியோ!

உன்னி உன்னி உழக்குகிறாய்

ஓ, என் பெண்ணே நீ வாழ்க!

சின்னக் காலின் வலுவெல்லாம்

சேர்த்து வலித்தே உழக்குகிற

உன்னைக் காணும் போதெல்லாம்

உள்ளம் பாகாய் உருகுதடி!

உன்னி உன்னி உழக்குகிறாய்

ஊர் ஊராகச் சுற்றுகிறாய்

உன்னைத் தெருவில் காண்கையில் என்

உயிரே சிலிர்த்துப் போகுதடி!

வெளிச்சம்

ஆடி-ஆவணி 1992

பள்ளிக்குப் போன பிள்ளை ஏன் வரவில்லை?

புதுவை இரத்தினதுரை

இளந்தளிரே!

நீ எங்கே?

எருக்கும்பம் போன்ற

சதைக் கும்பத்துக்குள்ளே

உன்னை எப்படித் தேடுவேன்?

கையெது

காலெது

மெய்யெது என்று

இனம் காண முடியாத

இறைச்சிக் குவியலுக்குள்ளே

இதுதான் என்மகள் என்று

உன்னை எப்படி இனம் காணுவேன்?

இளந்தளிரே!

நீ எங்கே?

அன்றும் வழமை போல் தான்

விடிந்தது.

எழுவான் திசையில் கதிரோன் எழுந்தான்

அதுபோல நீயும் அழகாய் எழுந்தாய்!

"அம்மா இன்று பரீட்சை" என்றாய்;

படித்தாய்

குளித்தாய்

சாப்பிட்டாய்

அறைக்குள்ளே சென்றாய்.

வெள்ளைப் புறாபோல் வெளியே வந்தாய்

துள்ளிக்கொண்டு சைக்கிளில் ஏறி

சென்றாய்.

வருவேன் என்று சொல்லிப் போனாய்

ஏனம்மா வரவில்லை?

இளந்தளிரே?

உன்னை எப்படித் தேடுவேன்.

ஐந்தாம் வகுப்பு "ஸ்கொலசிப்பில்"

அதிகம் புள்ளிகள் பெற்றவள்

ஆனநீ

எப்படித் தெருவில் இப்படிப் போனாய்!

"உத்தம சனாதிபதி"

உனக்களித்த சீருடையைத்தானே

அணிந்து சென்றாய்.

"மேன்மை தங்கிய பெரியவர்" தந்த

பாநூல்களைத்தானே சுமந்து சென்றாய்

இருந்தும் நீயேன் இப்படி ஆனாய்?

"இராச வீதியில்...."

என் இளவரசிக்கு என்ன நடந்தது?

'சிவப்பு பாதுகாப்பு நிதியத்துக்கு"

அருகில்

உன்னை ஏன் இப்படிப் பிச்செறிந்தார்கள்.

'சுப்ப சொனிக்" அடித்த தென்றார்கள்

உன்மீதுதான் குண்டுகள் வீழ்ந்ததென்று

அப்பனிவன் எப்படி நம்புவேன்.

பள்ளிப் பிள்ளைகள் செத்ததென்றார்கள்

அவர்களில் நீயும் ஒருத்தியென்று

எப்படி நான் நினைப்பேன்'

"உத்தமர்" தந்த "வெள்ளைச் சீருடை"

"இலவசமான பாடப் புத்தகம்"

உன்னிடம் இருந்த போதும்

அவர்கள்

எப்படி உன்மேல் குண்டுகள் வீசலாம்?

"இயந்திரக் கழுகில்" ஏறிவந்து

இங்கே குண்டுகள் வீசும் "அவனுக்கு"

என்தன் துயரம் எப்படிப் புரியும்?

கொழும்பில் இருந்து

அவனை ஏவி

குண்டை வீசெனச் சொல்லும் தளபதி

நாங்கள் துடிப்பதை எப்படி அறிவான்!

"ஞானமுருகன் கோயில் மண்டபம்"

"தேங்காய் சண்முகம் வீடும்"

வீதியும்

புலிகள் இருக்கும் குகையா?

இல்லையே!

அப்படியாயின் இவைகளின்மீது

எப்படிக் குண்டுகள் எறிந்திடமுடியும்?

தமிழனுக்குப் பிறந்த தளிரே?

தமிழிச்சி என்பதற்காகவே

நீ சிதைக்கப் பட்டாய்.

தமிழர் நிலத்தில் வளர்ந்ததுக்காக

பனைமரங்கள் கூடப் படுகாயம் அடைகின்றன

மாடிவீடுகள் மரணிக்கின்றன.

சின்னக் குடிசைகள் கூடத் தீக்குளிக்கின்றன.

என்மகளை மட்டும் எப்படி விடுவார்கள்?

ஆம்

என் உதிரப் பூவே!

தமிழிச்சி என்பதற்காகவே

நீ சிதைக்கப்பட்டாய்

சங்காரமான "வை-8" போல

சுப்ப சொனிக்கும் தீப்பிடித்தெரியும்

என்றோ ஒருநாள்

எங்கள் பிள்ளைகள்

இந்தக் கழுகையும் சுட்டு வீழ்த்துவர்

அன்று நான்

இராசவீதியில் நிமிர்ந்து நின்று

ஆடிப்பாடி அகமகிழ்ந்திடுவேன்!

விடுதலைப் புலிகள்

ஆடி 1993

கூற்றுவனைத் தூக்கிலிடு

புதுவை இரத்தினதுரை

எங்கே என் தம்பி?

எங்கே என் தம்பி?

இங்கே இருந்தானே, இருந்தவனைக் காணவில்லை

எங்கே என் தம்பி?

மெல்ல...மெல்ல

அந்த விளக்கணையும் வேளையிலே

எல்லோரும் சேர்ந்து 'எண்ணையிடு' என்றோமே

கல்லான நெஞ்சே....!

நீ கண்திறந்து பார்க்கவில்லை

நாவரண்டு நாவரண்டு,

நாதமணிப் பேச்சிழந்து

பூ சுருண்டமாதிரியாய் போய்முடிந்து விட்டானா?

காற்றே நீ மூசு,

கடலலையே பொங்கி எழு.

கூற்றுவனா?

அவனைக் கொண்டுவந்து தூக்கிலிடு

எங்கே என் தம்பி?

எங்கே என் தம்பி?

இங்கே இருந்தானே இருந்தவனைக் காணவில்லை

என் இனிய திலீபனே!

ஒரு வார்த்தை...

ஒரே ஒரு வார்த்தை மட்டும்.....

பேசிவிடு

"தமிழீழம்" என்ற தாரக மந்திரத்தைச்

சொல்லிவிட்டு;

மீண்டும் தூங்கி விடு

மக்கள் சமுத்திரத்தில்

மரணித்து விட்ட வீரனே!

ஒரு வார்த்தை;

ஒரே ஒரு வார்த்தை மட்டும்

பேசிவிட்டுத் தூங்கு......

என்னினிய தோழனே!

உனது மரணப்படுக்கை கூட

இங்கே மகத்துவம் மிக்கதாகி விட்டது

நீ கண்மூடியபடி தூங்குகின்றாய்

அந்தப் படுக்கை இங்கோர் பூகம்பத்தையே வரவழைக்கிறது

உன் சாவே இங்கோர் சரித்திரமாகிவிட்டது

செத்த பின்னர்!

ஊர்கூடித்

தேம்புவதுதான் இங்கு வழக்கம்.

ஆனால்....

ஊரே தேம்பிக் கொண்டிருந்தபோது

மரணித்த வரலாறு

உன்னுடன்தான் ஆரம்பமாகிறது

சாவு பலதடவை உன்னைச் சந்திக்கவந்து

தோல்வி கண்டது

இப்போது

சாவை நீயாகச் சந்திக்கச்சென்று

வெற்றிகண்டு விட்டாய்

என் இனிய திலீபனே!

நீ கையில் ஆயுதம் ஏந்தியபோதும்

உன்னை அருகிருந்து பார்த்துள்ளேன்.

நீ....நெஞ்சில் அகிம்சை ஏந்திய போதும்

அருகிலி பார்த்துள்ளேன்

எந்த வித்தியாசமும் தெரியவில்லை

போராளிகளுக்குரிய போர்க்குணமே உன்னில் தெரிந்தது

இந்திய அரசே!

இது உனக்குப் புரிகிறதா?

தம்பி திலீபன்.....உன்னிடம் என்னதான் கேட்டான்

எங்களை

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவிடு என்றான்.

எங்கள் மண்ணின்

இறைமையைத் தா என்றான்

இது குற்றமா?

இதற்காகத்தானே போராடினான்

இதற்காகத்தானே போராடினான்

இதற்கு என்ன பதில் தரப்போகின்றாய்......

உன் பதிலை

நேற்று வந்த விமானத்திலும் எதிர்பார்த்தோம்

தாமதித்துவிட்டாய்

நீ கடத்திய ஒவ்வொரு நொடிப் பொழுதும்

இங்கோர் புயலையே உருவாக்கிவிட்டாய்

திலீபன் என்ற புயல்

உன்னைச் சும்மா விடாது

உசுப்பியே தீரும்

எங்கே என் தம்பி?

எங்கே என் தம்பி?

இங்கே இருந்தானே!

இருந்தவனைக் காணவில்லை.

என்இனிய திலீபனே!

நிம்மதியாய்த் தூங்கு

நிலம் வெடிக்கப் போகிறது

நிம்மதியாய்த் தூங்கு

நிலம் வெடிக்கப்போகிறது.

காற்றே நீ முக

கடலலையே பொங்கி எழு

கூற்றுவனா?

அவனைக் கொண்டுவந்து தூக்கிவிடு!

ஈழமுரசு

28.9.1987

இந்தப் 'பளு'வை உணர்ந்தீரா?

அல்லை க.வ.ஆறுமுகம்

"எதிரி செல்வினிலே இறுதிவரை போராடி

'உரிமை' தனைப்பெற்று எமக்களிப்பார்!" என்று எண்ணி

'கருமி' களாய் நீங்கள் காத்திருந்தால் ஆவதென்ன?

"மந்திரத்தாலே மாங்காய் விழுத்திடுவார்!

தின்றிடலாம் நாங்களதைச் சுகமாக!" என்றிருக்கும்

உங்களுக்கு 'நாடு, உரிமை' என்ற பேச்செதற்கு?

போராளி களென்ன பூத கணங்களா?

'பாசுபதம்' பெற்றுப் பகைமுடிக்க நிற்பவரா?

உண்ண உடுக்க உறங்க எடுத்தசெயல்செய்யச்

செலவில்லாத் தேவதைகள் கூட்டமா?

போக வரப் பொருத "புட்பக விமானங்கள்!"

பிள்ளைகட்குப் பெற்றோர்கள் பெற்றுக் கொடுத்தீரா?

ஓடுகிற வனுக்கும் துரத்துகிற வனுக்கும்

ஒரு மாதிரிக் 'களை' என் றுலகத்தில் சொல்வார்கள்

ஒன்றேமுக் கால்கோடி ஒரு நாள் செலவு செய்வோர்க்

கீடுகொடுப் போர்க்கு ஒருரூபாய்க் கேதுவழி?

மாச்செல வின்றி அப்பம் சுடுவதற்கும்!

நோக்காடே யின்றி பிள்ளை பெறுவதற்கும்!

சாக்காட்டு வேளையிலும் தன்னலமே காப்பதற்கும்

பார்க்கின் றீரல்லால் 'பளு'வை உணர்ந்தீரா?

"ஈழ விடுதலைக்கு உயிரைக் கொடுப்ப" தென

'ஓட்' டளிக்கும் காலமெலாம் உரத்துநீர் கத்தலையா?

உயிரை விடவேண்டாம் உதவினால் போதும்" என்றால்

பொருளில் தொடுவதற்கே பொறுக்குதில்லை உம்மனது!

தேங்கிக் கிடக்கின்ற திரவியத்தில் தொட்டுவிட்டால்

ஓங்கி அழுதலறி ஊர்கூடித் திட்டுகின்றீர்

'வேங்கை; புலிகள்!' என்று வெற்றிகண்டால் சொல்வாயால்

"சோங்கைப் பொடிகள்!, தொலைவான்கள்!" என்கின்றீர்

"அடிமைக்கு மோட்சமில்லை" அருளாளர் சொன்னதெல்லாம்

இறைவனுக்கும் சம்மதமென் றுமக்கோ புரிவதில்லை

ஊரின் நடைமுறையில் எந்நாடும் போல் நடக்கும்

கொள்ளை, கடத்தல், கொலைகள், வழிப்பறிகள்

எல்லாமே இன்றிங்கே' இயக்கங்கள்' பேரில் வைத்து

உதவா திருப்பதற்கு உபாயம்நீர் கண்டு கொண்டீர்!

வல்லவர் நீர்! எப்படியும் வாழலாம் என்றிருப்பார்!

உங்களுக்கு நாடு, உரிமை என்ற பேச்செதற்கு?

ஈழமுரசு

9.3.1986

வாருங்கள்! மாந்துங்கள்! வாழ்த்துங்கள்!

பஞ்சாட்சரம்

உலகத்துக் காடுகளில்

ஊன் தேடுங் கழுகுகளே!

ஓடோடி வாருங்கள்!

உயரத்தால் வாருங்கள்!

கலகத்தின் மயமான

கனல் சூழும் இலங்கைக்குள்

கங்கையெனச் செங்குருதி!

காடெனவே பிண மலைகள்!

எங்கெங்குங் கிழக்கினிலே

இங்கங்காய் வடக்கினிலே

இதமான பதங்களிலே

எத்தனையோ பிணக்குவியல்!

சிங்களங்கள் பரம்பரையின்

"தீரமிகுஞ்" செயல்களினால்

தெருவெல்லாம் பெண், முதியர்

சிறுபிள்ளை பிண மதிகம்!

சுட்டபிணம் வேண்டுவதா?

சுடாதபிணம் வேண்டுவதா?

துண்டுகளாய் வேண்டுவதா!

தூள் தூளாய் வேண்டுவதா?

கொட்டு குடல் வேண்டுவதா?

கூழ் நிணமாய் வேண்டுவதா?

குறைப்பிணங்கள் வேண்டுவதா?

குலையாமல் வேண்டுவதா?

ஆயிரமாய் வாருங்கள்!

ஆனமட்டும் உண்ணுங்கள்!

அமருங்கள் பெருந் தொகையாய்!

'ஐந்து சீலம்' ஒதுங்கள்!

வாயினிக்க விருந்தமைத்த

வள்ளல்களாம் அமெரிக்க,

மாண் பிரிட்டன், இத்தாலி

இஸ்ரேலை வாழ்த்துங்கள்!

ஈழமுரசு

8.3.1987

கொடி பறக்குது கோட்டையில்!

ப. அறிவுடைநம்பி

கொடி பறக்குது கோட்டையி ,

கொடி பறக்குது கோட்டையில்!

அடிமை என்றதோர் பழி ஒழிந்தது-

கொடி பறக்குது கோட்டையில்!

கொடி பறக்குது கோட்டையில்,

கொடி பறக்குது கோட்டையில்!

எதிரிகள் படை கதிகலங்கிட,

கொடி பறக்குது கோட்டையில்!

புலி புகுந்தது கோட்டையுள்! - வெம்

புலி புகுந்தது கோட்டையுள்!

நிலை குலைந்தநம் பகைவர் அஞ்சினர்!

புலி புகுந்தது கோட்டையுள்!

கொடி பறக்குது கோட்டையில்,

கொடி பறக்குது கோட்டையில்,

விடுதலைப் புலிப்படை உயர்த்திய

கொடி பறக்குது கோட்டையில்!

தலை நிமிர்ந்தது தமிழினம்!

தலை நிமிர்ந்தது தமிழினம்!

அழிவு செய்பதை தொலைதல் கண்டதும்

தலை நிமிர்ந்தது தமிழினம்!

முரசொலி

27.9.1990

அறத்தின் ஒருவடிவோ?

வீ. பரந்தாமன்

புயலுக்குத் தென்றலுக்குப்

பூபதியும் பேராமோ?

அன்னைஇவள் தானே

அறத்தின் ஒருவடிவோ?

"காவலர்நாம் என்றுவந்து

கன்னமிட்ட இந்தியனே!

பாவங்கள் எத்தனையோ

அத்தனையும் பண்ணிவிட்டாய்!

அங்காடி யா? அன்றி,

ஆரும் வரப்போகச்

செங்கன் விலைமாதர்

சேரியா ஈழமிது?

ஏப்பமிட வந்தாய்நீ

எங்களது மண்ணைத்தான்

கூப்பிட்டா வந்தாய்?

கொடியவனே கொள்ளிவைக்க!

என்ன உரிமையிலே

இந்தமண்ணில் கால்வைத்தாய்?"

என்றிங்(கு) அடடா!

எரிமலையாய் ஆகிவிட்டாள்!

நீரோடை ஒன்று

நெருப்பாறாய் ஓடுதல்போல்-

பார்மடந்தை தன்பொறையாம்

பான்மைஇழந் தாற்போல்-

ஒருதிங்கள் ஆகவிங்(கு)

உண்ணாமற் செய்த

அருந்தவத்தில் தன்னை

அவியாய்ச் சொரிந்தாளே!

தாயின் உயிர் மூச்சில்

தமிழீழம் சூடாக

பாயிற் கிடந்தோர்

பதறி உழுந்தார்கள்;

குந்தி இருந்தோர்

குமுறிஎழ, இங்குவந்து

மந்திபோ நின்றோர்

மரமேறிப் பாய்ந்தார்கள்!

உண்மைஅறம் தோற்ற

வரலா(று) உலகிலில்லை!

"காந்தியம்" பாரதத்தில்

கைதவறிப் போனதுவே!

புத்தர் பிறந்தமண்

புண்முளைத்துப் போனதப்ப

நேரு மரபாகும்

முகவரியைத் தாம்தொலைத்தார்!

பண்டைமனு, வான்மீகி,

பாரதவி யாசரும்

கண்டறிய ஒண்ணாதே

காணாமல் போனார்கள்!

எந்த அறிஞரும்

ஏதிலியர் ஆனார்கள்;

இந்திஅர சாள

இனிப்பெரியார் தோன்றாரே!

வல்லாண்மைப் பேய்க்கு

வயிற்றுவலி கண்டதம்மா!

எல்லாரும் கையெடுக்க

ஈழத்தைக் காத்தவளே!

கண்ணகியாள் மாமதுரை

சுட்டதொரு கட்டுரைபோல்

பெண்ணரசி வல்லரசைப்

பிய்த்தெறிந்தாய்; மெய்யிதுவாம்!

மக்கள் புரட்சியின்

மூலப் பொறியாக

திக்கெல்லாம் போற்றத்

திலீபனும் பூபதியும்

வாழி! அறம்வாழி!

வாழ்க புலிவீரர்!

பீழை விலகிப்

பிரபா கரன்வாழி!

ஈழமிது வாழி இனிது.

ஈழநாதம்

4.4.1993

தாய்த்தமிழின் மண்!

மு.வே.யோ.வாஞ்சிநாதன்

ஊற்றாக நெஞ்சில் உருவான ஈழமெனும்

நாற்றுதனைப் போற்றி நல்லபடி வளர்த்தால்- மாற்றானின்

கூட்டமது இங்கிருந்து கலைந்தோடும்; நிலையாக

தோட்டாக்கள் என்றும் துணை!

பாத்திரத்தை ஏந்திப் பாதையில் பிச்சைக்குக்

காத்திருக்கும் கயவர் கைவிலங்கு பூட்டுவதோ-புத்திருக்கும்

சோலையிலே புகுந்துவிட்ட சிறுநரியை விரட்டுகிற

நாளையதே நம்மரிய நாள்!

காக்கவென வந்தவர் கன்னியரின் கற்பைப்

போக்குவரைத் தமிழினம் பொறுத்திடுமோ?- நோக்கமெலாம்

ஆக்கமின்றி அழிப்பதுதான் 'அகிம்சை' யென்றால்

தூக்கிடுவோம் துப்பாக்கி துணை!

தெள்ளு தமிழீழத் தென்றலினை நுகர்வதற்கு

கள்ளமதிக் கயவரவர் காலடியில் வீழ்வதிலும்- வெள்ளமெனத்

துள்ளுகின்ற வீரமுடன் துணிந்து சென்றால்

நல்லபடி நாமடைவோம் நாடு!

முத்துதனைத் தேடி மூழ்குகின்ற கடலோடி

நித்தமும் தன்னுயிரைத் தூசியாய் நினைத்துப் - புத்தியுடன்

அத்துறையில் இறங்குவதால் அள்ளுகின்ற முத்தைப்போல்

எத்தடையும் எம்முயர்வின் ஏணி!

காளையரும் கன்னியரும் கண்மணியாய் இருக்கையிலே

நாளைமலரும் நம்மினிய 'ஈழம்' என்று தோளுயர்த்தி

குளுரைப்போம்; சுதந்திரத்தின் சுவாலையிலே

மீளுமெங்கள் தாய்த்தமிழின் மண்!

ஈழநாதம்

25.5.1990

பெறுமானம் அல்லது நம்மைப்பற்றிய சுய விமர்சனம்

கல்வயல் வே. குமாரசாமி

சீனப் பருந்தும் கழுகும்

தமிழிழ வானத்தின் உச்சியிலே வந்து வந்து

வட்டமிடும்.

வானத்தில் வட்டமிட்டுக் குண்டுகளை எச்சமிடும்;

ஈனக் குரல்கள், இடிபாடு, தாக்கங்கள்

தானே வழி அறியாத் தன்மை

உயிர் பறிப்பில் போன கவலைக் கணக்கை

மனம் வரையும்.

சன்னம் வரைந்த சரித்திரத்தைச்

சிங்களமோ இன்னும் புரியாத மாதிரியே பேசும்.

"தமிழரின்துயரம்தீர்க்கத் தலைமையைத் தாரைவார்ப்பேன்".

அமுதமாய் அறிக்கை

அற்ப ஆயுளில் அடக்கமாகும்.

வீரக் கிளையில் இருந்து விழுது விடும்

வாரிகள் ; எங்கும்

வரலாற்றுப் பேனாமை செங்குருதி ஆக

சில பாடல் புதிது எழுதும்

சன்னம் வரைந்த தழும்பு மரங்கள்

"இதோ என்னடிக்குக் கீழே பார்!

இங்கே விழுந்திறந்து

முன்னோடியான முதிரா இளங்கொடிகள்"

என்று உரைக்கும் மௌன மொழி இரங்கல்;

அர்த்தங்கள்,

பின்னும் புதிய இணைப்புத் தழுவல்கள்.

விண்ணில் சுழலும் பருந்தும் கழுகுகளும்

மண்கருக எச்சமிடும் வேளை ; மனம் கலங்காப்

பன்னிரண்டு ஆண்டும் நிறையாப் பசுங்குருத்து

முன் நின்று எதிர்க்கும்

அவை முன்னால்

குண்டு எச்சமிடும்.

கீழே நுழைய நிலத்தில் குழி தோண்டிக்

கீரி, மரநாய், கிழப்பூனை யாதொன்றும்

ஊரெல்லைக் குள்ளே வராமல்

உறுதியுடன் போராட

இங்கே புலிக்குட்டிக் கூட்டங்கள்

ஏராளமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும்.

இந்த நினைப்பே எழாதபடி

ஈழத்தில் -

சந்தை நடக்கும்

சமயத்துக்கேற்றபடி அந்தவிழா, இந்தவிழா

ஆரோ எவருக்கோ பந்தம்

பிடிப்போர் எடுக்கும் அணிவிழா

சொந்தவிழா, சடங்கு, சோடிப்பு

என்றெல்லாம் கொண்டாட்டம்

கூத்து, குதூகலிப்பு நித்தியமும்;

சண்டை ஒருபக்கம் சலிப்பற்றதோர் வாழ்வு

உண்டு ஆறிக் கொஞ்சம் உறங்கவே நேரமில்லாத்

தொண்டும், உழைப்பும், துறைதுறையாய் நாமிங்கே

வாழப் புதிய வழிகள்

எமது தமிழ் ஈழம் மகிழும் இனிது

இதற்குரிய

காரணத்தை யாரும் கருத்தூன்றிப் பார்த்தோமோ?

முத்தமிழ் விழா மலர்

1992

இவனா என் பிள்ளை!

நாவண்ணன்

அம்புலியைக் காட்டி ஆவென்ன வைத்து

"அச்சாப் பிள்ளை "யென "ஆய்தந்த பிள்ளை"

கம்பால் அடித்து கண்டித்து பின்னர்

கண்­ர் துடைத்து அணைத்திட்ட பிள்ளை;

"வம்புக்குப் போகாதே வலுச்சண்டை செய்யாதே

வாய்காட்டாதே" யென்று வளர்த்திட்ட பிள்ளை;

பெம்பகைவர் படைஅழிக்கும் வீரனாம் எனக்கேட்டு

வியக்கின்றேன் இன்று, இவனா என் பிள்ளை!

இருட்டுக்கு அஞ்சியவன் இரவானால் தனியாக

இருப்பதற்கு துணைகேட்ட பயங்கொள்ளிப் பிள்ளை

விரட்டிக் கலைத்தாலும் விட்டகலாம் தாய்சேலை

வீம்போடு அவளோடு அலைகின்ற பிள்ளை;

பரட்டைத் தலை சீவான் படிப்புக்கு ஒளித்திடுவான்

பசியின்றி விளையாடித் திரிகின்ற பிள்ளை;

முரட்டுத் துவக்கோடு 'சென்றி'யிலே நின்று

முழிக்கின்றான் இன்று இவனா என்பிள்ளை!

விதம்விதமாய் சமைத்து விருப்பு சுவையறிந்து

வேலைக்குக் கொடுத்தாலும் "சீசீ இது என்ன

இதம்இல்லை வேண்டாம் எனக்கு" என்றுகூறி

எடுத்தெறிந் தெழுகின்ற என்பிள்ளை.

பதம்பாகம் இல்லாது பசிக்கே உணவென்று

படையலாய் அவித்த எதையேனும்

நிதம் உண்கின்றானாம் நிம்மதியாம் அவனுக்கு

நினைக்கின்றேன் இன்று, இவனா என்பிள்ளை!

நாய் குரைக்க ஓடிவந்து நடுங்கிப் பதறியவன்

நாலுபேர் முன்நிற்க துணிவில்லாக் கோழை

தாய்க்கும் எனக்கும் நடுவினிலே துயிலுவதே

தனக்குச் சுகம் என்று எண்ணியவன் இரவில்

பாய் நனைப்பான், எழப்பயந்து படுப்பான் எழுப்பாது;

பட்டாசு வெடிக்கே பலகாதம் ஓடுபவன்

தாய்நாடு காக்கும் தானையிலே முன்னணியில்

திகழ்கின்றான் இன்று இவனா என்பிள்ளை?

இப்படியாய் மற்றவர்கள் இகழ்ந்துரைக்கும் குணங்களுடன்

இளப்பமாய் வாழ்ந்திட்ட என்னுடைய பிள்ளை

தப்படிகள் இல்லாது தக்கபடிதான் வளர்த்த

தத்துவத்தை வியக்கின்றேன் இவனா என்பிள்ளை!

எப்படித்தான் இவனுக்குள் இதுவெல்லாம் தோன்றியதோ?

இவர்சார்ந்த இடமே காரணமாம் என்றார்;

அப்படியாய் புதுமாற்றம் அடைந்த அவனுக்கு

அப்பன் நானன்றோ? அவனே என்பிள்ளை!

ஈழநாதம்

15.5.1992

இருவர் பாடல்

சாருமதி

உச்சால வெய்யில் காய

ஊரை விட்டுப் போற மச்சான்

வட்டைக் குள்ள போறியோ கா

ஆமிக்காறன் வாற வழி.

அய்யனும் நான் போற வழி

வட்டைக்குள்ள போகாட்டா

வகுத்துச் சோத்துக் கென்ன வழி?

வகுத்துச் சோத்தப் பாத்தியெண்டா

வம்புல நீ மாட்டிருவா

ஆமிக்காறன் சுட்டுப் போட்டா

ஆரு தருவா உசிருனக்கு?

போறவழி வாறவழி

பெரும் பயமே என்று போனால்

ஊட்டுக்குள் நானிருந்து

உசிரக் காத்து என்ன பயன்?

உன்னை நம்பி நானிருக்க

உசிரை நீ உடலாமோ?

எண்ட சின்ன மச்சானே

இண்டைக்கு நீ போகாத கா!

வட்டைக் கெண்டு போக வந்தா

வழியிலே நீ நிண்டு கொண்டு

இட்டுமங்கள் ஏன் மச்சாள்

என்னை விடு நான் போக.

இட்டுமத்துக்கில மச்சான்

இலுப்படிப் பள்ளத்தால

பத்து ப பேரைச் சுட்டுப் போட்டு

பாதகர்கள் போறாராம்.

பாதகர்கள் செய்யும் வதை

பார்த்திருக்க ஒன்னலையே மச்சாள்

நீதி இதுக்கில்லையோ இந்த

நீசராட்சி முடிவதெப்போ?

தாயகம்

ஜுன் 1986

அஞ்சலி!

நவாலியூர் நடேசன்

நீலக் கடல் அன்று செங்கடலானதே!

கோலத் தமிழன்னை ஓலம் அதிர்ந்ததே!

புயலோடு போராடி அலையோடு விளையாடி

அயர்வின்றிக் குடும்பத்தின் பசி தணித்த சோதரரே!

கடற்தாயின் மடிமீது களித்திருந்த உங்களது

உடல்மீது வெறியர்கள் உழுதனரே குண்டுகளால்!*

குற்றமொன்றும் இல்லைத் தமிழரென்ற குற்றந்தான்

முற்றுந் துறந்த "தர்மம்" இதுவென்று சொல்லுகிறார்!

சூதறியா இதயமதைச் சன்னங்கள் கிழிக்கையிலே

வேதனையால் என்னை புகன்றீரோ; நினைத்தீரோ!

நீலக் கடல் அன்று செங்கடலானதே!

கோலக் தமிழன்னை ஓலம் அதிர்ந்ததே!

புயலை எதிர்க்கும் புஜங்கள் கிழிந்ததோ

அலையைக் கடக்கும் திறன்கள் அழிந்ததோ

வலையைப் பிடிக்கும் கரங்கள் சோர்ந்ததோ

மலையும் குலுங்கும் கொடுமை நேர்ந்ததே!

நீலக் கடல் அன்று செங்கடலானதே!

கோலத் தமிழன்னை ஓலம் அதிர்ந்ததே!

மீன்களைக் கரைதன்னில் பரப்பிவிட்ட காட்சியென

ஊன்துடிக்க, உளம்பதைக்க நீங்களன்று

பேதனையின் முகபாவம் விறைத்துப்போன

மீளாத துயில்தன்னில் கிடந்திட்ட அக்கோலம்

ஆழமாய்த் துயரத்தில் ஆழ்ந்துவிட்ட உள்ளத்தில்

மாளாத அடிமைக் கொடுவிலங்கைப்

பொசுக்கிவிடும் தீப்பிழம்பை மூட்டிவிட-

எழும்உணர்வே உமக்கான அஞ்சலியாம்!

* 10.6.1986 இவ் மண்டைதீவுக் கடலில், 31 கடற்தொழிலாளர் அரசு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

அலை

புரட்டாசி 1986.

இப்படியும் மரணவீடுகள்

எஸ்.ஜி. கணேசவேல்

ஆண்டுகள் நான்கு அரேபிய வாசம்

மீண்டவர் வந்து மூன்றே நாட்கள்

குண்டுகள் உருவிடக் குருதியும் பெருகிடக்

குப்புறக் கிடந்தார் கோபால் மாமா!

பாவம் கோபால் மாமா அவர்க்குச்

சாவரும் என்றொரு சகுனமும் காட்டலை

கொள்ளிப் பிள்ளையின் குரலைக் கேட்டுக்

கண்களை மூடிட ஆச்சிக் கிழவி

படுக்கையிற் கிடந்து பிசத்தும் காட்சியை

எழுத்தில் செதுக்கிய அஞ்சலைத் தவிர-

எண்பதைத் தாண்டிய ஆச்சியின் கடனை

ஐம்பதைக் கடந்த அவள் மகன் முடித்திட

எண்ணுதல் இயல்பே! இதிலெதும் பிழைஅவர்

பண்ணிய தாக யாரே கொள்வீர்!

வீட்டுக்குள் கிடந்தார்.....வெளியே இழத்தனர்

றோட்டில் சுவரொடும் சாத்திச் சுட்டனர்!

(அந்நிய இராணுவம் அமைதி பேணி

சுட்டவர் தம்மொடு ரோந்து சென்றது)

யாவரும் அறிவீர் ஞாலமும் அறிக!

கோபால் இழைத்த குற்றம் இதுதான்

ஆன வயதினில் அவரொரு கன்னியைத்

தானம் கொண்டனர் தாரமாய் வந்தவள்

மைந்தரை ஈன்றனர்; வளர்ந்த ஓர் மகனோ

தந்தையைப் போல்கடல் தாண்டி உழைக்காமலே

விடுதலை வேட்கையில் வேங்கையைச் சேர்ந்தனன்

அடுக்கா தென்றவர் அப்பனைப் பிடித்தனர்

(புலியினைப் பிடித்திட இயலா தாயின்

புலியின் அப்பனை முடிப்பதும் தகுமே!)

ஆச்சியின்னும் சாகவில்லை!

அவளுக்குக் கொள்ளிவைக்க

காத்திருந்த தந்தையுடல்

காண பேரன் வரவுமில்லை!

* 28.5.1989 அன்று ஏழாலையில் நடைபெற்ற உண்மைச் சம்பவம்.

ஈழநாதம்

4.5.1990

சூரிய நமஸ்காரம்

சு.வி.

ஒளிக்குருதி வீச்சோடு எழுகின்ற

சூரியனே பார்

இரத்தப் பிடிப்பின்றிச் சோகையுற்றோம்

உன் குருதியை எமக்குள் பாய்ச்சு.

குந்தியீன்ற புத்திரனைப் போல்

எம்மைத் தள்ளி விடாதே

சொல்

பேர் சொல்லியழைக்கவும்

பிள்ளைகளற்றுப் போவாளா எம் தாய்?

தன் உதிரக் கனிகளில்

ஊர் கொள்ளா விளைச்சல்

வீடுவந்து சேர்கவென

ஓயாது புலம்புகிறாள்.

கூவிக் கூவிப் பரவெளியெங்கும்

அலையும் அவள் குரல்

உனது கதிர்களில் ஊடறுத்து

அதிரவில்லையா?

ஒளிக்கனி நாடி உன்னிடத்தே

சிறகடித்த பறவைகளின் சங்கீதத்தை

எரிந்த சாம்பரினின்றும் மீட்டுத்தா

இருள் படிந்த புதைவுகளினின்றும்

புதிய குருதிப்பொலிவோடு

இவள் பிள்ளைகளை எழுப்பித்தா!

வீர்யரின் பூமியாக இது விளங்கட்டும்

சோகையுள்ள வாழ்நிலத்திலும்

சுதந்திரம் வரண்ட தேசத்திலும்

வலம் வருதல் உனக்கு வெட்கமாயிருந்தால்

ஒளிநிறை வாழ்வின்

உன்னதத்தை எமக்குத்தா!

ஈழநாதம்

3.4.1992

தாகம் தீர்ப்பாள் நாக பூஷணி!

இ.ஜெயராஜ்

அண்டம் காக்கும் அன்னையைக் கூட

குண்டர்கள் வந்து கொடுமைகள் செய்வதோ!

தாயாம் தன்மையில் தணிந்தவள் இருக்க

பேயோர் அவளின் பெருமை யழிப்பதோ

இத்தனை நாளும் எங்களின் மண்ணை

பித்தர்கள் வந்து பேயென ஆண்டார்

எத்தனை கொலைகள் எத்தனை அழிவு

புத்தனை வணங்கிப் போற்றுவோம் என்போர்

சத்தியம், தர்மம், சாந்தியாந் தன்மை

அத்தனை யுமிங்(கு) கழித்தனர் ஐயோ!

தந்தையைக் கொன்றார், தாயினைக் கொன்றார்

மைந்தரைக் கொன்றார், மழலைகள் கொன்றார்

கண்ணிலாக் குருடர் காலிலா முடவர்

பென்ஷன் வாங்கும் பெரியவர் என்றவர்

கொன்றவர் தொகையைக் குறிக்கவா முடியும்?

இத்தனையும் இங்(கு) ஏனெனக் கேட்டால்

பகர்கிறார் நாமெல்லாம் "பயங்கர வாதி"யாம்

குழலிகள் கிழவிகள் குருடர்கள் அனைவரும்

பயங்கர வாதியா? பாரெலாம் சிரிக்கும்

இருண்டவன் கண்ணில் எல்லாம் பேயே!

எனும்மொழி இவரால் ஏற்றமே பெற்றது

இன்னும் பொறுப்போம் என்றே யிருந்தோம்

அன்னையைத் தொட்டார்! அழிவது உறுதி

தாயாய் எம்மைத் தாங்கிய அவளை

பேயோர் தொடவும் பேசா திருப்பதா?

நாயாய் வாழ்வதில் நலமிலை கண்டீர்!

எங்களின் கோபம் எதுவெலாம் செய்யும்

என்பதை அந்த ஈனர்கட் குரைப்பீர்!

நாக பூஷணி நம்மவர் சுதந்திர

தாகம் தீர்ப்பாள் தரணியிற் காண்பீர்!

ஈழமுரசு

16.3.1986

புதுக்கீதை பிறக்குது ஈழத்திலே!

வளவை வளவன்

வங்கக் கடலும் வளர் தமிழீழமும்

செந்திரு வானாய்ச் சிவந்து போனது

எங்கள் வாழ்வும் எம்முயிர் உடலும்

இங்கு அனலிடை மூழ்கி எழுந்தது.

சிங்கள மென்றொரு தேசத்து ஈனர்கள்

எங்கள் பகைவராய் தம்மையே மாற்றினர்

எங்கும் படைவிரித் தெம்மை அழித்திட

கங்கணம் கட்டிக் கனலில் வீழ்த்தினர்.

பிஞ்சு பூவொடு குஞ்சுகள் கூடினர்

'அஞ்சிடா தவர் கொட்டம் அடக்குவோம்

எங்கள் தாயக மண்ணினை மீட்டிட

எங்கள் பகையது எங்கென'த் தேடினர்.

தணலேந்தி நின்றாலும் நீராகச் சென்றார்

கனல்மூட்டி வைத்தாலும் அலையாகிப் போனார்

கனவிற்குள் எமைவென்ற பகைவர்கள் நிலைமாற

கனவிற்கு வழியின்றித் தூக்கம் கெடுத்தார்.

கிலிகொண்டு எதிராளி படைவிட்டு ஓட

புலிவீரர் நிழல்மட்டு ம தொடராகச் செல்லும்

கெரில்லாப்போர் புதியதொரு பரிமாணம் காணும்

உலகத்தின் திசைஎங்கும் தமிழீழம் ஈர்க்கும்.

உலகாளும் புதுவதன திருவுறையும் காட்சி

அலகாகும் வரலாற்றின் புதுயுகத்து உத்தி

மலரான திருமனத்தில் உரமேற்றி வைத்தோன்

பலமான தலைவனென வரையறைகள் பூக்கும்.

ஈகத்திலே உயர்தீரத்திலே மனமோகத்திலே எழு

வேகத்திலே புயல் கோபத்திலே எரி

தாகத்திலே தமிழிழமெனும் உயர் வேதத்திலேநறு

போதந்தரும் புதுக்கீதை பிறக்குது ஈழத்திலே!

ஈழநாதம்

26.2.1993

வான் முகிலே! அழுவது ஏன்?

நிலா தமிழின்தாசன்

வான் முகிலே ஏனழுதாய்? ஈழமண்ணில்

இளமைந்தர் படுந்துயரைக் கண்டுநொந்தா

நான் என்ன அகந்தை யினைக் கொண்டமாற்றான்

நாள்தோறும் குண்டுமழை பொழிதல் கண்டா?

மீன் மிதந்த ஏரியிலே! எங்கள் நாட்டு

மீனவரின் உடலங்கள் மிதத்தல் கண்டா!

தேன் விஞ்சு சுவைத்தமிழின் சோகம் கண்டோ

சிந்துகிறாய் வான்முகிலே! சேதிசொல்வாய்?

செந்தமிழர் ஈழத்தின் திருவை எல்லாம்

தீயிட்டார்! திருடியவர் பறித்துச் சென்றார்

வெந்த புண்ணில் மேன்மேலும் வேலைப்பாய்ச்சி

வேதனையைத் தரும்வெறியர் செயலைக்கண்டா

சந்தமிகு தமிழீழ மண்ணை மீட்கச்

சந்தனமாய்த் தேய்கின்ற மாவீரர் தம்

விந்தைமிகு தற்கொடையால் மனசு நொந்தா

விண்முகிலே அழுகின்றாய்? விளக்கம் சொல்லாய்!

சுத்தமனத்தோடெமது சொந்த மண்ணில்

சுதந்திரத்தைத் தாவென்று பரிந்து கேட்டும்

நித்தமவர் தரமறுத்து எங்கள் சொந்த

நிலம் பறித்து எமை ஓடு! எனத்துரத்தி

புத்தனது போதனையைத் தலை கீழாக்கிப்

போர் தொடுத்து எம்மினத்தைப் பொசுக்க எண்ணி

எத்தர் குலம் செய்யுமிருட் துயரங்கண்டோ!

இரங்கி மனம் துடிதுடித்து அழுகின்றாய் நீ?

கார்முகிலே நீயழுதால் எமக்கு இன்பம்!

காய்வுற்ற நிலம் நனையும் கழனி பொங்கும்!

ஏர்நடத்தும் எமதுழவர் நெஞ்சில் இன்பம்

ஏறிவரும், இன்முகத்தில் பசுமை பூக்கும்!

சீர் அற்ற கால நிலை என்று, அஞ்சும்

சிங்களவர் படைமெல்லத் தரித்து நிற்கும்

போர் முகத்தில் புலிவீரர் இதனைக் கண்டு

புன்னகைப்பர்! தமிழர் நாம் அழவேமாட்டோம்!

தடைபோடடுத் தடைபோட்டு எழுச்சிகொண்ட

தமிழீழ மக்களினை அடக்கவென்று

மடையர்குலம் கண்டகனா அனைத்தும் இன்று

மண்ணாகிப் போனநிலை உணர்ந்து கொண்டார்

படைவலிமை கொண்டெம்மைப் பணிய வைக்கப்

பார்த்தனெம் மனவலிமை கண்டு வேர்த்து

குடைகின்ற எண்ணங்கள் நெஞ்சைத் தாக்கக்

குழம்புகிறான் எதிரி! நாம் அழவே மாட்டோம்!

விடைகொடு!

கோப்பாய் சிவம்

துணைவீ!

துயில் கலையாதே!

உன் உதரத்தின்

உயிர் அணு ஒன்று

துயிலும் இவ்வேளை

துயில் கலையாதே!

துயல் அடையாதே!!

கதவின் அருகே

காலடி யோசை.....

தடித்த 'பூட்ஸ்'களின்

கனத்த ஓசைகள்.......

அதனால் என்ன?

நான் விரைகின்றேன்

நீ துயில் கொள்க!

உன் துயர் நீக்கு!!

நாளை-

என் மகன் வரட்டும்

அதுவரை துயில்க!

எங்களின் வீரக்

கதைகளை நீ தினம்

அவனுக் கெடுத்து

அழகுறுக் கூறு!

புரட்சிக் கதைகளைப்

பொலிவுறக் கூறு!

வீரர் சரித்திரம்

சொல்லு!

மந்திரவாத மயக்குறும் கதைகள்

அரசகுமார அபத்தத் கதைகள்

இவையெல்லாம் தூர

வீசி எறிந்திடு!

காரும், பொம்மையும்

காட்டுதல் வேண்டாம்;

துவக்கும் கத்தியும்

குண்டும் கொடுத்து

வீரம் விளைத்திடு!!

விடைகொடு எனக்கு!!

ஈழமுரசு

17.10.1986

கௌதம புத்தருடன் - ஒரு கவிதா நேர்காணல்

ஜெ.கி.ஜெயசீலன்

நான்:

தார்மீகப் பெரு நெறியைத் தக்கபடி போதித்து

யார் மீதும் பகையில்லா யாகத்தைச் செய்தவனே!

உனதடியை வணங்கி வரும் உன்னரிய புத்திரர் தாம்

மனதறியச் செய்துவரும் மா கொடுமை அறியாயோ!

ஊருறங்கும் நள்ளிரவில் ஊளைவிடும் 'ஷெல்' நரிகள்!

போருறங்காப் பூமியிதில் பொழுதெல்லாம் குண்டு மழை

நீ வளர்த்த கருணையினை நெஞ்சத்திற் பேணாமல்

தீ வளர்த்த தென்னிலங்கை திருந்த வழி சொல்வாயா?

புத்தர்:

அன்பார்ந்த தமிழ் மகனே! அவலத்தின் உள்ளே

மண்பாய்த்து அழிகின்ற மடமை பல கண்டேன்!

போதி மர ஞானமதைப் போதித்தும் என்பக்தர்

நீதி தரவில்லையெனும் நீசத்தாற் துடிக்கின்றேன்!

கொல்லாமை பேரறமாம்; குரலெடுத்துக் கூறிய என்

சொல்லாலே ஏமாற்றிச் சுட்டெரிக்கும் அரசியலார்

பொல்லாத வினையெல்லாம் புரிகின்றார்; பின் வந்து

கல்லான என் சிலையைக் கண்மூடித் தொழுகின்றார்!

என் செய்வேன் தமிழ்மகனே! என்றர் பெயர் சொல்லிப்

புண் செய்யும் "பௌத்தர்க்குப்" புத்திதரப் பார்க்கின்றேன்!

வன் செய்கைக் காரர் அவர் வருகின்ற நாளிலெனும்

இன் செய்கை பல புரிய இதயத்தால் வேண்டுகிறேன்.

நான்:

அரச மரத் தொழுகையினை அனுதினமும் செய்வதனால்

"அரசும் மரம்" ஆகியதோ! அறியேன் புத்தா!!

சங்கமித்தா கொண்டுவந்த சமயநெறிச் சின்னமதை

அங்கமதால் வணங்கி வரும் அரசியலார் எங்களது.

தங்கமணி ஈழத்தைத் தான் விழுங்கிப் போகின்ற

பங்கமதை பார் புத்தா! பணிந்தோம் இல்லை!!

'வை - எட்டு'ம், 'பொம்மர்'களும் வானத்தை உழுதுவரக்

கையெட்டும் தூரத்திற் களப்பலிகள் நடக்கிறது!

மெய்ஞானம் போதித்த மேலான கௌதமனே!

பொய்ஞானம் போதிக்கும் பொல்லாதார் ஆட்சியிது!

அருளா தாரமென அஹ’ம்சைவழி சொன்னீர்;

பொருளா தாரத்தையே, பொழுதினிலே தடை செய்தார்!

போக்கிரிகள் அரசாளும் பொன்னான சிறு தீவில்

தாக்குதல்கள் எல்லாம் நம் தலைமீதே நடக்கிறது!

கேட்கிறதா அழுகுரல்கள்? ஹெலி, பொம்மர் பேரிரைச்சல்?

ஆக்கினை தான் எம் வாழ்வா? ஆவேச நெருப்பானோம்!

புத்தர்:

பொல்லாத யுத்தத்தாற் புண்ணாகிச் சிதைகின்ற

எல்லாநற் தமிழர்க்கும் எனதாழ்ந்த அனுதாபம்!

நேற்று வரை ஈழத்தை நெருப்பிட்டுச் சாகடித்த

கூற்றுவரைப் பக்தரெனக் கொண்டதற்காய் வருந்துகின்றேன்

தங்கமணிச் சிறு தீவைத் தன்னலத்தால் வதைக்கின்ற

அங்கமதியீனமுறும் அரசியலார் அழிந்தொழிவார்!

இனவாத வெறி முற்றி எரிகின்ற திருநாட்டை

பிணவாச நாடென்று "பிரித்" தோதும் அரசாட்சி

இனியேனும் வரும் நாளில் இல்லாமல் போகின்ற

கனிவான நாள் தோன்றும்! களப்போரிற் புலி வெல்லும்!

நான்:

தென்னிலங்கைத் தீயவரின் திருந்தாத அரசியலை

மண்விளங்கச் சொன்னதற்கு மனதார என் நன்றி!

உள்ளபடி லங்காவின் உண்மைகளைத் தெளிவாக்கும்

நல்ல பதில் தந்தாய் நீ; நன்றியுடன் விடை பெற்றேன்!

வெளிச்சம்

ஆடி 1993

இதன் தொடர்ச்சி kaalam2.mtf ல் வருகிறது

** kaalam1.mtf ன் தொடர்ச்சி**

இனி

கி.பி. அரவிந்தன்

ஒரு நொடி

ஒரு கணம்

ஓரிமைப் பொழுது

கண் மூடித் திறப்பதற்குள்

அது நிகழ்ந்தது.

குத்தென

சாய்ந்து சரிந்து

சட்டென

மேலெழ நிமிர்கையில்

எச்சமிட்டது

'யார் தலையில் விடியுமோ?'

கண்களை உரசும்

சூரிய தெரிப்பு;

முகிலுக்குள் மறையும்

உயிர் கொத்திப் பருந்து.

மனிதம் உறைந்து

உயிர்த்தது

"குடிமனைக்குள் போடுறானே

கோதாரியில போவான்

கடவுளே கண்ணில்லையா?

மண்ணை வாரி

வார்த்தைகளை விசிறி

காற்றைச் சபித்து......

எங்கே

என் வீடு

என் முற்றம்?

சின்னக் குருவிகள்

தம் வியர்வைக் குழையலில்

தொட்டிழைத்த கூடு

தொப்புள் கொடியில்

பூத்த சிறுமலர்,

தத்தித் தத்தித்

துளிர் நடை நடந்து,

விரித்த கனவுகளின் முற்றம்.

முற்றத்து விளிம்பில்

மாலைக் காற்றுக்கு

மணம் சேர்த்த மல்லிகை.

காலை இளம் மலர்வுடன்

வணக்கம் சொல்லும் செம்பரத்தை

குலை தள்ளிக் கிடந்த

பச்சை வாழை.

எல்லாமே எல்லாமே

எங்குற்றது.....?

என்னவாயிற்று....?

குண்டுகள்

சப்பித் தின்று

துப்பிய எச்சத்துள்

பால் மாப்பேணி,

அலுமினியக் கோப்பை,

குழந்தையின் சூப்பி

எப்படித் தேட?

இந்தியச் சிப்பாயே

உனது நாட்களில்

என்னவாய் முனிந்தாய்?

"ஆளுக் கொரு வீடு

வீட்டுக்கொரு கிணறு

கிணற்றுக்குள் தண்­ர்....!"

வெந்து அவிந்து

பொசுங்கிக் கருகி

உடைந்து நொருங்கி

சிதைந்து சிதிலமாய்ச்

சிதறிக் கிடக்குது

எனக்கென்றொரு

வீடு

இனி

அதுவும் இல்லையென்றாயிற்று-

இனி!

வெளிச்சம்

தை-மாசி 1992

தேசத்தின் விருட்சம்

ச.கருணாகரன்

முகம் யாரென்பது தெரியாது

வயதை ஓரளவு கணக்கிட முடியும்

துவக்கு

சீருடை

சப்பாத்து

கழுத்தில் 'சயனைட் குப்பி'

மண்மீட்பும்

இனத்தின் விடுதலையும் அவனுள் கனலும்

அவனைத் தெரியும்

விடுதலைப் போராளி.

வீதிகளில் அவன் போகவும்

நாய்கள் குரைப்பதில்லை

மனிதர்கள் அச்சமுறுவதில்லை

குழந்தைகள் அவனிடம்

நட்பும் உரிமையும் கொள்கின்றார்கள்

அவநது துப்பாக்கியை

இந்த மனிதர்கள் நேசிக்கின்றனர்

அவனைத் தன்னுடைய புதல்வன்

என்பதில் பெருமிதம் கொள்கிறது கிராமம்.

மரவள்ளியும் உழுந்தும் விளையும் புலவில்

ஒரு நேர விவசாயி;

எல்லையில்

சன்னங்கள் துளையிட்ட காட்டுமரங்களின் அடியில்

முழு நேரமும் சுடுகலனுடன்

புதைத்து வைத்த வெடிகளின் பின்புறம்

எதிரியின் நுழை பார்த்திருக்கும் காவலின் காற்று.

அவன் விடுதலையின் குறியீடு

சுதந்திரத்தின் படிமம்

இவனின் தியாக மூச்சில்

தேசத்தின் விடுதலையும்

இனத்தின் சுதந்திரமும் விளையும் -

மனிதர்கள்

பறவைகள் போல் கவிதை பாடுவார்கள்!

ஈழநாதம்

12.7.1991

இனியும் துயிலோம்

வவுனியா திலீபன்

அழும் வாழ்க்கை

தொழும் வாழ்க்கை

எமக்கினி

வேண்டாம்!

கட்டற்ற

சுதந்திர வாழ்கையே

வேண்டும்!

எழுவோம்

தேசத்தின் பரப்பெங்கும்

தீயாய்ப்

பரவுவோம்.

எமக்கெதிரே

போடப்படும்

தடைகளை

உடைப்போம்.

இது-

எமது மண்

என-

சப்தமிடுவோம்!

எமதங்கங்கள்

ஆயிரம்

இங்கு வீழ்ந்து போகட்டும்!

ஏன்? ஏன்?

உயிர்த் தளிர்கூட

உதிர்ந்து போகட்டும்

ஆனால்-

இம்மண்ணின்

மனித வாழ்க்கை

மகிமையாய் இருக்கட்டும்!

நாம் புயலுடனும்

தீயுடனும்

வாழுவோம்; ஆனால்-

புனிதமாக

வாழுவோம்.

இந்தத் தேசம்

எமது

கரங்களில் வீழும்

நாள்-

பெருநாள்;

ரத்தத்தின்

அர்த்தத்தைச்

சொல்லும் நாள்!

நம்-

மண்ணில்

பூக்கள்

சிரிக்கும் நாள்!

சூரியன்

எம்மைச்

சுகமாகச்

சுடும் நாள்!

சலசலத்து

இலைகள்

சங்கீதம்

பாடும் நாள்!

நிரந்தர வெளிச்சம்

வேண்டும்.

இருட்டுக்குள்

உறக்கத்தைக்

கலைப்போம்!

இனியும்

துயிலோம் என

சத்தியம் செய்வோம்!

சத்தியத்தினூடே

சபதம்

எடுப்போம்!

வீடும் நாடும் விழிப்பும்!

செ.பொ.சிவனேசு

எழுந்து கொள்க

என்னருந் தோழா!

தூக்கம் இன்னொரு

சாக்காடு-

எனது வார்த்தையெனில்

ஏற்க மாட்டாய்;

ஏளனஞ் செய்வாய்!

ஆதலினால்

வள்ளுவன் வாக்கினைச்

சொல்லி வைக்கிறேன்

"தூக்கம் இன்னொரு

சாக்காடு!"

நட்ட நடு நிசியில்

நாய்கள் குரைத்தால்-

முற்றத்து வேம்பின்-

கிளையொன்று

காற்றிலே துவண்டு

ஓட்டிலே இடித்தால்-

துணுக்குற்று விழித்து

திருடனோ என்று

திகிலுடன் எழுந்து.....

வீட்டினைக் காப்பதில்

விழிப்பினைக் காட்டு

ஆனாலும்-

நாட்டினைக் காப்பதில்

இன்னுமேன் இல்லை?

நாய்களின் குரைப்பில்

கிளையின் இடிப்பில்

சிலிர்த்தெழ வைக்கிற

சிந்தனை பொதிந்ததெனில்-

விமானங்கள் வருகையில்

துணுக்குறல்

இன்னும் ஏன் இல்லை?

எறிகணை வெடிப்பினில்

திகில் தரல்

இன்னம் ஏன் இல்லை?

உன்னிடம் கொள்முதலாய்

தோல்விகள் அவைக்கேன்?

நாடு போனபின்

வீடுதான் ஏது?

தட்டு மட்டுமே

பறிபோவதாய் எண்ணமா?

பிட்டு உன்னுடன்

எஞ்சுதல் திண்ணமா?

எழுந்து கொள்க

என்னருந்த தோழா!

தெருவினில் இறங்கி

புழுதியில் தொட்டு

நெற்றியில் நீறிடுக!

ஈழநாதம்

8.5.1992

நத்தார் விசனம்

சத்தியவசனம்

தொண்டையில் நிற்குதே கேக்குத் துண்டு,

சண்டையிலா என் ஆண்மகன் சரிஞ்சான்?

ஒண்டி...ஒளிச்சி...நிண்ட பிள்ளையைக்

கண்டு பாஞ்சதாம் கவசக் குண்டு!

மண்டை விறைக்குது, போன மார்கழி!

கேக்கடிக்கத்தான் பேக்கிங் பவுடர்

வாங்கப் போனவன் போனவன் தானே!

சின்னவன் கெஞ்சக் கேக்கைச் செய்தும்

தொண்டையில் நிற்குதே கேக்குத் துண்டு!

நந்தாராம் நத்தார் நமக்கென்னப்பா நத்தார்?

அத்தாரும் செத்தார் அக்கா ஏங்கிச் செத்தா,

கொத்தார் கொயுத்தார், குருசர், மருசலினர்

இத்தனை பேரும் ஒரு தோணியிலே போய்ச் செத்தார்

நத்தாராம் நத்தார்!உம்...நாளைக்கும் ஆராரோ?

ஏரோதரசன் ஏவிய சேவகர்

கூலிக்காகக் கொலையைச் செய்தனர்

அப்பாவிகள்தான் அகப்பட்டார்கள்;

தப்பிவிட்டீர்கள் தயாபர யேசுவே!

எரோதரசன் இறக்கவும் இல்லை;

இளைஞரை கொல்ல மறக்கவுமில்லை!

கொட்டிலுக்குள் இருக்கும் குழந்தையே

ஆணாய் இருப்பதால் ஆபத்தையா.

உன்னைச் சிலுவையில் அறைந்து கொன்றவரும்

இன்னும் உயிருடன் இருக்கிறார் யேசுவே.

நானை நமக்கொரு 'கானான்' நாட்டை

நாடி நிற்கும் என் நல்ல தம்பியைச்

சிக்கெனப் பிடித்துச் சிலுவையில் அறைய

முப்பது வெள்ளிக் காசுக்கு,

இப்புதுப் பணியை ஏற்றுள்ளார் ஏசுவே!

பழைய ஏற்பாட்டிற் படிக்கிறோம் ஐயா

'மன்னா' என்னும் பெயரிய அந்த

வானமுதத்தைப் பொழிந்தார் தேவன்

மக்களுக்கு என்று. அக்களிப்புடனே.

புதிய ஏற்பாட்டின் படியே எமக்குச்

சன்னமாரி பொழியுது; அடடா

என்ன மாதிரிப் பொழியுதென் யேசுவே!

ஆதர் சிமித்து நீ அனுப்பிய ஆயுதம்

ஐயம் பிள்ளையின் கையை முறிக்குது.

அன்றுன் பாட்டனார் அன்பு மிஷனால்

அறிவாலயங்கள் எழுப்பப்பட்டன;

ஆஸ்பத்திரிகள் கட்டப்பட்டன.

அன்று நீர் கட்டிய ஆசுபத்திரி

இன்று நீர் அனுப்பிய ஆயுதத்தாலே

சேதமாக்கப்பட்டு விட்டதே!

வேதம் என்ன சொல்லுது?

பாதகர்க் காயுதம் வழங்கவா சொல்லுது?

பைபிளைத் தமிழிற் தானே படித்தோம்

'ஒறிஜினல் ரெக்ஸ்ற்' உம் மொழியில் உண்டே!

"வை டோன்ற் யு றெவர்?" ஐயா சிமித்தே!

ஈழநாடு

5.1.1986

ஒவ்வொரு காலையிலும்...

மைதிலி அருளையா

எப்போது பார்த்தாலும்

ஒவ்வொரு காலைப் பொழுதும்

அழுது கொண்டேதான் விடிகிறது.

அழுகை....

உள்ளத்தில் உறைந்திருக்கும்

கவலையைக் கரைத்தபடி நீராய்ஓடும்.

ஒவ்வொரு இரவிலும் கவியும்

சோகை பிடித்துப்போன கருமையைக்

கரைத்தபடி பிழியப்பிழய அழுது சோர்ந்து

முகம் வெளிறிய குழந்தையாய்த் தோன்றும்

காலை.

ஒவ்வொரு காலையும்

என் தேசத்தின் எங்கோ ஒருமூலையின்

ஒரு மனித ஆத்மாவின் ஒப்பாரியுடன்தான்

ஆரம்பிக்கிறது.

இமயதூதர்கள் வந்து போனதற்கு

அடையாளமாய்

சேற்றில் அழுந்தப் படிந்திருக்கும்

சாப்பாத்துக் காற் தடங்களையும்

எரிந்து முடிந்து எஞ்சியிருக்கும் வயரையும்கூட

காலையில்தான் பார்க்கமுடிகிறது.

தென்னோலைத் தோரணங்கள்

வீதியெங்கும் நிறைந்து

தலையை நெருடுகிறது.

மழைவருவதன் அறிகுறியான

இடியோசையினைப் போல

எங்கும் சதாநேரமும்

துக்கத்தைப் பிரகடனப்படுத்தும்

பறை முழக்கம்.

அதில் அமுங்கியபடி

எந்நேரமும் இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும்

நாய்களின் ஊளைச் சப்தம்

சங்கக்கடைகளில் கூப்பனிற்காகக் காத்திருக்கும்

நிண்ட வரிசைகள்!

இன்றையின் தொடர்ச்சியாய் நாளையும்

இதேமாதிரி....இதேரீதியில்.....

வேண்டவே வேண்டாம்

நாளைய காலை விடியவே வேண்டாம்!

திசை

13.4.1990

நானுங்கூட ...

த.றெஜஜ“ந்திரகுமார்

யாருமே இல்லை

நிலவு

பூமியோடு மௌனமாக

முத்தமிட்டுக் கொண்டிருந்தது

காவலுக்கு

நட்சத்திரங்கள்

வேவு பார்த்துத் திரியும்

துண்டு மேகங்கள்

யாருமே இல்லை

நிலவு

பூமியோடு மௌனமாக

முத்தமிட்டுக் கொண்டிருந்தது

நான்

விழித்திருக்கிறேன்

கூடவே

கானகன்

சுடு பொறியான

'டாஸ் ரூ'வின் குழலைச்

சுத்தப் படுத்திக் கொண்டிருந்தான்

ஓ.......

நிலவே

என்ன?

நான் விழித்திருக்கிறேன் என்று

ஆச்சரியப் படுகிறாயா?

அப்படியொன்றும் இல்லை-

ஊர் உறங்குகின்ற வேளை

நீ

எவ்வளவு அன்போடு

பூமியுடன்

நெருக்கமாக இருக்கிறாய்?

நானும் அப்படித்தான்

என் மக்கள்,

என் நாடு,

எதிரி......

எதிரியை

நுழைய விடாது

விழித்திருக்கிறேன்!

தளிர்

K.பாபு

போலி இரவும் வாழ்வும்

மண்ணாய்ப் போகட்டும்

நிலைத்த உணர்வுகள்

சுவடு பதித்த நினைவுகளில்

எம்மினிய வாழ்வும் கனவும்

அர்த்தமுள்ளதாய் அமையட்டும்.

கடந்த நிகழ்வுகளின்

நிதர்சனத்தை - நீ

சுமந்து செல்க.

உன் பிஞ்சுக்கால் உரம் பெறும்

புதிய குரல் உயர்ந்து ஒலிக்கும்-

உன்னை நம்புகிறேன்

நீ

மனிதம் வெளிக்க

மனிதனானவன்!

திசை

3.11.1989

நிழல் போதும் என்றால்.....

நாக. சிவசிதம்பரம்

ஒளியோடு காண முடியாத யாவும்

உறவாக வாழ்வு புரியும்!

இருளோடு கூடி உறவாட - ஆட

ஒரு கோடி உண்மை தெரியும்!

வழிமுடமுட - விழிமூடலின்றி,

வழி தேடுமெங்கள் வாழ்வு!

அழிவோடும் மீள உருவாகும் எண்ணம்

உயிர் வாழ்வில் என்றும் உண்டு!

ஒளிதேடும் பிஞ்சுக் கொடியேறும் போது

தடை யாவையும் தளிர் மீறும்!

நிழல் போதுமென்று களையாற நேரின்

துயர் நூறு வந்து சூழும்!

மின்னின்றி வாழ முடியாது என்று,

முகம் வாடவில்லை இரவு!

காற்றையும் வென்று - போத்தலுள் நின்று

கண் திறக்கின்றது விளக்கு!

கதிர்கொண்ட நெல்லை களை மூட மூட

மழை கூடித் தாக்கினாலும்,

தலைசாயலின்றி எழவென்று கோடி,

விதை தந்து மீள வாழும்!

வேரோடிழுத்து வெட்டிச்சரித்து

வெயியிலிலே துண்டாடினாலும்,

துண்டான கட்டை மரவள்ளி கூடத்

துளிர்விடும் சந்ததிக்காக!

நிலவு விழுவானில்-விடிபொழுது கூட

நடு இரவு போலிருந்தாலும்....

மூடு பனியோடு இருள் அகலுதென்று.....

முகையவிழும் பூக்கள்...சொல்லும்!

முத்தமிழ் விழா மலர்

1991

உன் மரணம் மனதில் எழுதிய கவிதை

தெல்லியூர் ஜெயபாரதி

காற்றில் தலையசைக்கிற

மல்லிகையாய்

மனதினுள் சிலுசிலுக்கிற

உன் நினைவுகள்....

சூரியன் கண்திறக்காத

ஒரு காலையில்தான்

உன் மரணச்செய்தி

என் செவிவாசல்களில்

முரசறையப்பட்டது.....

விழிகளின் தேசமெங்கும்

பூத்த நீர்ப்பரல்கள்.....

பாதங்களின் பள்ளங்கள்வரை

பொங்குகிற

ஒரு பெயரற்ற துக்கத்துடன்

என்னை நான்

உன் வீட்டிற்கு

அழைத்துவந்தேன்.....

நீ, தூங்குவது போல்

கண்மூடியிருந்தாய்;

அப்போதும்

காயாத உன் குருதியின்

கதகதப்பில்

உறங்குகிறவனாய்த் தெரிந்தாய்....

உன்னைச்சுற்றிலும்

அர்த்தமில்லாத ஆழமான

மௌனம்.

நீ எப்போது என் வீட்டிற்கு வடிந்தாலும்

கனமான மௌனத்தையும் கைப்பிடித்துவருவாய்

துப்பாக்கியை விடப் பாரமாயும்

உன் வீரத்தை விளக்குவதாயுமிருக்கும்

அந்த மௌனம்

இப்போதும் அப்படித்தான்....

எங்களுடைய கல்லூரியின்

அங்கங்களில் எல்லாம்

உன் ஞாபகச்செதுக்கல்கள்....

எங்கள் கிராமத்தின்

நீண்ட வீதிகளிலெல்லாம்

உன் பாதங்களின் முத்தங்கள்....

துப்பாக்கிமுனையால்

எதிரிகளின் மேனிகளில்

நீ போட்ட கையெழுத்துககள்-

அவை வீரஎழுத்துக்களாய்

வாங்கிக்கொடுத்தன

எத்தனையோ பட்டங்கள்

லெப்டினன் கேணல்.....என

நீளும் இந்தப்பெயர்களை விட

"மாவீரன்" என்ற பெயர்-

அதைத்தான்

நீ அதிகம் நேசிப்பதாய்க் கூறினாய்....

நல்ல கவிதைகளை

ரஸ’ப்பதுபோல

நீ போராடுவதை

நேசித்தாய்....

இன்று இந்தத்தேசமே

பூஜிக்கும் புலியானாய்....

என் விழிகளில்

நீராய் வழிவது

உன் ஞாபகங்களின் துளிகள்தான்!

கீழ்த்திசையின் முகம் நோக்கி....

எஸ். உமாஜிப்ரான்

அந்த விடியல் இதுவல்ல....

இருளால் தாக்கப்பட்ட

வைகறை

கறைபடுத்தப்பட்ட

வெளிச்சம்.

விழிப்புகள் மறுக்கப்பட்டதால்

உறக்கங்களோடு

உறவாடும் விழிகள்

நெஞ்சை மிதிக்கும்

ஆதிக்கச் சப்பாத்துக்களால்

திணறலான சுவாமிப்பு

குரல்வளையை நெரிக்கும்

இனவாதக் கரங்களால்

சுயமில்லாத பேச்சு

கால்கள் முட்டியிட

கைகள் தொழும்பு செய்தபடி

எதிரி கொப்புளிப்பது

எங்கள் குருதியில்

அடுப்பு எரிப்பது

எங்கள் எலும்புகளில்!

அந்த விடியல் இதுவல்ல.....

களைய வேண்டிய தளைகள்

புதிது புதிதாய்

தகர்க்கவேண்டிய தடைகள்

ஒவ்வொரு உருவிலும்

ஓங்கி வளர்ந்து

நாங்கள் ஒத்தாலொழிய

எங்கள் குருதியில்

அவன் கொப்புளிப்பதை

நிறுத்தமாட்டான்

எரிமலையாய்

வெடித்தாலொழிய

எங்களை விறகாய்

நினைப்பதை மறக்கமாட்டான்.

மண் சிவக்க

குருதி சிந்தி

விண்ணதிரக் குரலுயர்த்தி

வழியெங்கும் உயிர் விதைத்து

கீழ்த் திசையின்

முகம் நோக்கி

நெடுந்தொலைவு

கடும் பயணம்....

அந்த விடியல் புலரும்

சூரியக் கதிர்கள்

முகம் தழுவும்

கறையற்ற வெளிச்சம்

இருள் கழுவும்

தலை நிமிர்த்தி

தமிழினம் வானுயரும்!

ஈழநாதம்

11.11.1992

விழ விழ எழுவோம்!

மீரா

கல்லறைகள் மீண்டும்

கருத்தரிக்கின்றன....

இடித்தழிந்த கட்டடங்கள்....

வானை நோக்கி எழும்புகின்றன....

சாய்ந்து வீழ்ந்த மின் கோபுரங்கள்....

சாலையெங்கும் ஒளி கொடுக்கின்றன.....

மழை நம் கழனிகளில்

மாதந்தவறாது பெய்கிறது....

சூரிய வெளிச்சம் - மக்கள்

முகங்களில் படிகின்றனது....

காற்று தென்றலாகித்

தவழ்ந்து வந்து - வெளிகளை

எல்லாம் வருடிச் செல்கிறது....

சமுத்திரத்தில் வீரர்களின்

சாம்பல் கலக்கமுன் எங்கள்

கைகளில் முளைத்த துப்பாக்கி

எதிரியை இலக்குப் பார்க்கிறது.....

இதற்கு மத்தியிலும்

எங்கள் நிலத்தின்

எல்லைகளில் எல்லாம்

மாவீரத்தை பறைசாற்றும்

புலிக்கொடி பட்டொளி

வீசிப் பறக்கிறது...

அடி வானத்தையும் தொட்டு

இன்னும் மேலே

உயர உயர

அது அசைந்து ஆடி

எதிரிக்கு

எச்சரிக்கிறது......

"இது எங்கள் மண்!"

ஈழநாதம்

21.06.1991

எங்கே போனீர்கள்?

வினோதினி

எங்கே போனீர்கள்.....?

வழி தவறி வந்தவன் போல்

ஒரு நிமிஷத் தயக்கம்

இந்தத் தெருதான்!

தொலைவில் தெரியும் மாதா கோவில்......

இந்த மண்ணுக்கேயுரிய புழுதிப் படலம்

எண்பத்து மூன்றிலே இடிந்து போன

அரசடி மண்டபம்......

இந்தத் தெருதான்!

புழுதிப் பூச்சுப் படிந்த

'பூட்ஸ்' காலால்

எரிந்த கட்டைகளை விலக்கி

பாதை செய்து நிமிர

தோளிலிருந்து நழுவும் துப்பாக்கி

என் மனம் போல கனக்கிறது.

குண்டு மழை பொழியும்

சண்டைப் பறவைகளால்

சமாதியாக்கப்பட்டது போக

எஞ்சியிருக்கும் அத்திவாரம் மட்டும்

மௌனமாக வரவேற்கிறது.

எங்கே?

எங்கே போனீர்கள்.....?

எனதுகுரலைக் காற்றுத் திருடிக் கொண்டது

போர்க்களத்தில் வேட்டோசை கேட்டு

அஞ்சும் எதிரியைவிட

இந்தக் கனத்த மௌனத்தைக்கண்டு

நான் அஞ்சுகிறேன்.

உடைந்த சட்டி பானைத் துண்டுகள்....

நொருங்கிய கண்ணாடிச் சிதறல்கள்....

என் கால்பட்டு

அமைதியைக் கொன்று போடுகன்றன.

எங்கே.....?

கண்­ரோடு விடை கொடுத்த

என் தாய் எங்கே?

துப்பாக்கியைத் தடவிப் பார்த்து

மகிழும் என் தம்பி எங்கே.....?

அண்ணா, அண்ணா என்று

எனைச் சுற்றிவரும்

செல்லத் தங்கை எங்கே?

மாலை போட்ட

அப்பாவின் படங்கூட இல்லையே?

அந்த இடுகாட்டிலிருந்து

எழுந்து நடக்கும்போது .....

சாம்பல் கலந்த புழுதியில்

முன்னைவிட அழுத்தமாய்ப் பதியும்

என் 'பூட்ஸ்' அடையாளங்கள்.

ஈழநாதம்

28.5.1993

ஒரு நெய்தல்

நிதர்சன்

குருநகர் - 1986

மாசி மாதம் 15ஆம் நாள்.

காற்று வீச மறந்த

கடல் பேசாமல் இருந்த

அந்த இரவில்....

குருநகரில் வள்ளங்கள்

அணிவகுத்துப் போயின.

பல்லி சொல்லவில்லை,

பூனையும் படுத்திருந்தது,

சகுனம் பிழைத்ததாக

எவரும் சொல்லமுடியாது;

பாலைதீவை நினைத்துக்

கட்டாயம் செபித்திருப்பார்கள்.

அலைகளை, வானத்தை நம்பி,

ஆண்டவனை நம்பி....?

தொடர்வது அவர்களின் பயணம்.

சில நாட்களின் பின்

ஒருவன் மட்டும்

நீந்தி வந்தான்.

மற்றவர்களைப் பற்றி

அவனுக்கும் தெரியாது;

தெரிந்து கொள்ள ஆசைப்பட்டவர்கள்

தேடிப் போனார்கள்,

சிலர் கடலுக்கும்

சிலர் முகாம்களுக்கும்......?

பெண்கள் மட்டும்

குந்தி இருந்து -

ஆரவாரம் பார்த்து-

நம்பிக்கையுடன் செபம் செய்தார்கள்.

காற்று

இவர்களில் இரக்கப்படும்;

அலைகள்

இவர்களிடம் அன்புசெய்யும்;

இருந்தாலும் ......

வெளிச்சவீடு விளக்கணைந்து

யாருக்காய் அஞ்சலிக்கிறது......?

2

எங்கள் கடல் சுடலையானது

வானம் தீப்பற்றி எரிகிறது

நட்சத்திரங்கள் முறைக்கின்றன

அலைகள் பிணங்களை

உருட்டுகின்றன......

எப்படித் தெரியுமா?

பேய்கள் வந்தன....

அலைகளுக் கிடையில்,

கள்வரைப் போல

படுத்துக் கிடந்தன

நிலவு, நீர்ப்பரப்பில்

வெள்ளியாக மினுங்கும்போதும்

இருட்டுக்குள் நுரைகள் தெரியும்,

இரைச்சலும் கூடி வரும்,

மீன்கள் செத்து நாறும்படி

இடி அதிரும்,

மத்தாப்பூச் சிதறல்கள்

நெருப்பு அம்புகளாய்,

நீளும்.....

இது நிரந்தரமாக...

கடலும் சுடலையானது;

மீன்களுடன் சேர்த்து

பிணங்களையும்

சுமக்கலானது....

கேட்டீர்களா.....?

கடலில் பேய்கள் படுத்தன,

கரையில் தொழிலும் படுத்தது

காய்ந்து கிடக்கும் வாடிகளும்

காய்ந்து அழும் வயிறுகளுமாய்,

சீவியம் கருவாடாயிற்று.....

எதுவோ-

இரக்கமுள்ள கடல் அலையே!

நீ பிணங்களை உருட்டு.....

3

வானமும் கடலும்

பிரியும் சந்தி வரை

பார்வையைத் தூர எறிந்து

அவள் இருப்பாள்....

இரவு அணைத்த கைகள்

நீத்திக் களைத்திருக்கும்,

நிரந்தரமாய் விறைத்திருக்கும்;

அவளுக்கும் தெரியாது.

இமைகள்

நம்பிக்கையில் துடிக்கும்

வாய் ஓயாமல் செபிக்கும்

எஞ்சின் இரையும் போது

காது கொடுத்து

அவள் காத்திருப்பாள்.

இரக்கமுள்ள கடல் அலையே.....!

கரைக்குப் போ....

அவன் பிணத்தை

நீ உருட்டிவிட்ட

கதையைச் சொல்லு;

இடுப்பெலும்பு

சன்னம் பட்டு,

உடைந்ததையும் சொல்லு......

அவள் அழுவாள்

ஒப்பாரியும் வைப்பாள்

எல்லோரையும் சபிப்பாள்

நீதான் என்ன செய்ய.......?

கண்­ரையும் வாங்கிக்கொண்டு

திரும்பி வந்துவிடு....

அலை

மார்கழி 1986

சந்தோசம் அதிகம்

இ. சிவானந்தினி

முன்பக்க மதிலோரத்தில்

எங்கள் கடைசிநேரச்

சந்திப்ப....

உன் இதயம்

அழுததற்குச் சாட்சியமாய்

விழி ஓரங்களில்

ஈரக்கசிவுகள்.

"போகின்றேன்....."

என் அனுமதியில்லாத-உன் முடிவு,

காதலைவிட கடமைகள்தான்

உன் கண்களில் நின்று

கையசைத்தன;

சின்னதாய் ஒரு

விழி அசைப்பில் விடைபெற்றாய்.

உன் கண்களில் சோகத்தை

இனங்காண முடிந்தாலும் - இறுதியான

பிரிவின் வேதனைகளுடன்

உதடுகள் துடித்தாலும்,

இவற்றை எல்லாம் விட

போராடப்போகும்,

சந்தோசம்தான் அதிகம்.

இது, பொறாமையாக இருந்தாலும்

எனக்குப் பிடித்திருக்கிறது.

கனவுக்கு வயதில்லை;

காதலுக்கு அழிவில்லை.

சுதந்திரக் காற்றில் - நம்

சுதந்திர உள்ளங்கள் கலக்கட்டும்!

ஈழ நாதம்

17.5.1991

அழைப்பு

நாமகன்

குப்பி விளக்கின்

மங்கியவெளிச்சத்தில்

புத்தகத்தின் மீது

தூங்கிய விழுகையில்தான் கேட்டேன்.

இனிய நாதஸ்வரமும்

காதைப் பிளப்பதாய்.....

நெடிய இரவொன்றில்

கொடுமைகள் நடந்தன.

குழந்தைகளும் பெண்களுமாய்

நூற்றெழுபது

மரணங்கள் நிகழ்ந்தன.

மாலையிலிருந்து காலைவரை

தீக்கிரையானதில்...

கொக்கட்டிச்சோலையும் *

மனித வாடையை இழந்தது.

சடலங்கள் கூட

சேதிகள் சொல்லுமென்று

'அவர்கள்'

புதைகுழியிற் போட்டு மூடினர்;

உயிர்ப்புடனிருந்தும்

எமது விழிகளில் மட்டு ம

மௌம் உறைந்திருக்கிறது.

நாம் இன்னமும்

பார்த்துக்கொண்டேயிருக்கிறோம்.

வீடுகள்....வீதிகளெங்கும்

தீப்பற்றி எரிந்தும்

கிராமம் கிராமமாய்

மரணித்தும்.......

நாம் இன்னமும்

பார்த்துக்கொண்டேயிருக்கிறோம்!

தோழனே

எழுந்து வா!

இப்போது

வெண்முகில்களிலும்

தீப்பற்றியாயிற்று

சோழக்காற்று

இரவின் அமைதியை

இரக்கமின்றிக் கலைக்கிறது

இன்னுமா உறக்கம்.......?

* 12.6.1991இல் கொக்கட்டிச்சோலையில் இராணுவம் மக்களைப் படுகொலை செய்தது.

ஈழநாதம்

19.6.1991

உடன் வரவும்!

பாண்டியன்

மரணம் வீதிகள் தோறும்

உலாவருகிறது,

வீதிச்சுவர்கள்- அஞ்சலிச்

சுவரொட்டிகளால்

நிறைந்தே கிடக்கின்றன.

"உடன் வரவும்" -

தந்தி அடித்துச் சொல்லியுமாயிற்று.

விடியலின் ஆரம்பம் தெரிந்தும்

தூக்கம் இன்னும் என்ன

வேண்டிக் கிடக்கிறது!

அதோ!

பாலைவன வெளியின்

பாதியில் கிடக்கிறது

திருடப்பட்ட எம் சுதந்திரம்.

கிட்டப்போனால்

எட்டப் போவதற்கு - அது

அடிவானமல்ல;

வாருங்கள்!

முன்னிலையும் படர்க்கையும்

எம்முடன் சேர்ந்தால் -

நாளை அது எம்கையில்!

ஈழநாதம்

5.4.1991

பகை தொலைத்து

நீதி காப்போம்!

செ. மகேந்திரன்

சென்றுவிட்ட நாட்களெல்லாம்

எங்கள் வாழ்வின்,

சிறப்புரைக்கும் கண்ணாடி;

மனிதன் பூவில்,

நன்றிருந்து உண்டுறங்கி

ஆடிப் பாடி

நிலைத்திருக்கும் நாட்களென்ன

கோடி ஆண்டோ!

இன்றிருப்பான் நாளையவன்

இல்லை என்ற,

இலக்கணமே மனிதனென்போம்;

இதுவே உண்மை.

வாழ்பவர்கள் மானிடத்தின்

மகிமை தன்னை

வாழ்த்துதற்காய் வாழ்திற்தான்

வாழ்வு கோடி.

தாழ்வுபட்டுத் தரணியெல்லாம்

அலைந்து சோர்ந்து,

தன்மானம் இழந்தடிமை

வேலை தேடி

மாழ்வதிலே மகிமையில்லை;

எங்கள் மண்ணில்

மானமுடன் வாழ்வதுதான்

மதிப்பும் மாண்பும்.

கூழ்குடித்த போதுமன்பே

குறையாச் செல்வம்

குன்றனைய தியாகமதே;

நிலைத்த வாழ்வு.

அஞ்சியஞ்சி அடிப்பவனுக்(கு)

அடிபணிந்து

அல்லலுடன் நீண்டதினம்

வாழ்தல் கேடு;

கெஞ்சியுயிர் நிலைத்துலகில்

கீழ்மை சூழக்

கீர்த்தியற்ற பொய்யுறவில்

மயங்கல் தீது.

துஞ்சுதலை நீக்கியெழு

மண்ணின் மைந்தர்,

துலங்கநட விடிவுவரும்

துயர்கள நீங்கும்.

நெஞ்சுயர்த்து நிலையுணர்த்து

நிமிர்ந்து செல்வோம்;

நெருக்குமெதிர்ப் பகைதொலைத்து

நீதி காப்போம்!

இடைவெளிகள்

இயல்வாணன்

நண்பனே!

எனக்கும் உனக்கும் இடையில்

எவ்வளவு இடைவெளிகள்!

நானும் நீயும்

எங்கள் தேசத்தில்தான்

நிற்கிறோம்;

ஆனால்

நம் இடைவெளிகள் மட்டும்

தொலை தூரத்தில்.....

பள்ளிக்குச் செல்லும் தெருக்களில்

பிஞ்சுப் புளியங்காய்களைப் பறித்து

பை நிறையப் போட்டுக் கொண்டு

கை பற்றித் திரிந்த நாட்கள்......

வகுப்புக்குப் போகாமல்

வழுக்கியாற்றில் நீந்திய பொழுதுகள்....

கள்ளமாய் விளாங்காய்க்குக்

கல்லெறிந்த வேளைகள்....

இன்னும் நினைவிலுண்டு.

பச்சை உடையுடன் சந்திகளில் நிற்கும்

பாதகரைப் பீதியுடன் பார்த்து மிரண்டு

ஆமி என்றலறும் என்னைத் தேற்றும்

உன் ஆதரவுக் கைகள்......

ஆமியின் பூட்ஸ் கால்கள் உன்னைப்

பதம் பார்த்தபோதும் கலங்காத

உன் விழிகள்.....

எல்லாமே நினைவிலுண்டு.

நம் இடைவெளிகள் மட்டும்

தொலை தூரத்தில்....

எனக்கும் உனக்கும்

காதல் பெரிதானது.

நான் பெண்மேல் காதல்கொள்ள

நீ மண்மேல் காதல் கொண்டாய்.

நான் அவளுடன் சுற்றித் திரிகையில்

இராணுவம் உன்னைத் தேடியலைந்தது;

நீ காட்டில் கரந்துறைந்தாய்.....

நான் அவளைக் கைப்பிடித்து

தாலி கட்டியபோது

நீ ஆயுதத்தைக் கைப்பிடித்து

குப்பி கட்டிக் கொள்கை வழிநடந்தாய்.

நான் என் பின் வழிமுறைகளை

உருவாக்கிய வேளை-

நீ உன் பின்னால்

ஒரு தலைமுறையையே

அணிதிரட்டியிருந்தாய்.

நான் வாழ்வுப் பிரச்சினைகளுக்கு

முகம் கொடுத்த வேளை-

நீ சமூகப் பிரச்சினைக்குத்

தீர்வு கண்டிருந்தாய்.

நம் இடைவெளிகள் மட்டும்

நிரப்ப முடியாத தொலைதூரத்தில்......

இடம்பெயர் வாழ்வும்-

இலக்கின்றிய பயணமுமாய்

நான் ஓட,

இவ்வவல வாழ்வு நீக்க

நீ

இலக்கு நோக்கிப் பயணிக்கிறாய்;

கையில் இலகு இயந்திரத் துப்பாக்கியுடன்........

விடிவெள்ளி பூக்க வில்லை

வீதியிருள் தொலையவில்லை

விடியலின் பாடலுக்காய் - உன்

விரலசையும்; தாளமிடும்.

உனதும் தோழரதும்

உறுதி குழைந்த உயிர் விதைகள்

புதிய உலகொன்றைப் பிரசவிக்கும்;

நாளைய நம் வழிமுறைகள்

அதிலே நிழல் ஆறும்;

உமை நோக்கி

நம்பிக்கைக் கீற்றுடன் நாம்....

எனினும்......

நம் இடைவெளிகள் மட்டும்

தொலை தூரத்தில்......!

இறப்பற்றோர்!

கப்டன் கஸ்தூரி

வெட்டப்பட்ட கரங்கள்

வேகமுடன் வளர்கின்றன.

முறிக்க முறிக்க

முளைவிடும்

மூர்க்கமான செடியைப் போல்,

கத்தரிக்கப்பட்ட கரங்கள்

கணுக்களைப் பிரசவிக்கின்றன

சிதைக்கப்பட்டவைகள்

சிவப்பாக வெடிக்கின்றன.

நெரிக்கப்பட்ட குரல்வளைகள்

நெருப்பு வரிகளில்

முற்றுகையை எதிர்த்து

முழக்கமிடுகின்றன.

சூடுபட்ட

சுவாசப் பைகள்,

ஆக்கிரமிப்பாளனை

அவிப்பதற்கு

விடுதலை மூச்சை

வெம்மையாக

வெளியேற்றுகின்றன.

இறந்து போனான்

என எதிரியவன்

எக்காளமிடுகையில்,

பிணங்கள் இங்கே

பிறவி எடுக்கின்றன.

எதிகளே.....

துடிக்கப் பதைக்க

வதைத்துக் கொல்லுங்கள்;

அதனாலென்ன!

துண்டிக்கத் துண்டிக்கத்

துளிர்ப்பார்கள் வீரர்கள்.

எங்கள் எல்லை நீக்கி

உங்கள் படைகள்

ஓடும் வரை

எங்கள் வீரர்க்கு

இறப்பே இல்லை.

உரிமைவேண்டி

உயர்ந்த கரங்கள்

ஆக்கிரமிப்புகளுக்கு

அடிபணிந்து போகாது!

கஸ்தூரியின் ஆக்கங்கள்

வைகாசி 1992.

எழுதாத கவிதை....

கப்டன் வானதி

எழுதுங்களேன்

நான்

எழுதாது செல்லும்

என் கவிதையை

எழுதுங்களேன்!

ஏராளம்.....

ஏராளம்....எண்ணங்களை

எழுத

எழுந்துவர முடியவில்லை;

எல்லையில்

என் துப்பாக்கி

எழுந்து நிற்பதால்,

எழுந்துவர என்னால் முடியவில்லை!

எனவே

எழுதாத என் கவிதையை

எழுதுங்களேன்!

சீறும்

துப்பாக்கியின் பின்னால்

என் உடல்

சின்னா பின்னப்பட்டு போகலாம்

ஆனால்

என் உணர்வுகள் சிதையாது

உங்களைச் சிந்திக்க வைக்கும்.

அப்போது

எழுதாத என் கவிதையை

எழுதுங்களேன்!

மீட்கப்பட்ட - எம் மண்ணில்

எங்கள்

கல்லறைகள்

கட்டப்பட்டால்

அவை

உங்கள்

கண்­ர் அஞ்சலிக்காகவோ

அன்றேல் மலர் வளைய

மரியாதைக்காகவோ அல்ல!

என் மண்ணின்

மறுவாழ்விற்கு

உங்கள் மன உறுதி

மகுடம் சூட்ட வேண்டும்

என்பதற்காகவே!

எனவே

எழுதாத என் கவிதையை

எழுதுங்களேன்!

அர்த்தமுள்ள

என் மரணத்தின் பின்

அங்கீகரிக்கப்பட்ட

தமிழீழத்தில்

நிச்சயம் நீங்கள்

உலாவருவீர்கள்!

அப்போது,

எழுதாத

என் கவிதை

உங்கள் முன்

எழுந்து நிற்கும்!

என்னைத்

தெரிந்தவர்கள்

புரிந்தவர்கள்

அரவணைத்தவர்கள்

அன்பு காட்டியவர்கள்

அத்தனை பேரும்

எழுதாது

எழுந்து நிற்கும்

என்

கவிதைக்குள்

பாருங்கள்!

அங்கே

நான் மட்டுமல்ல

என்னுடன்

அத்தனை

மாவீரர்களும்

சந்தோஷமாய்

உங்களைப் பார்த்துப்

புன்னகை பூப்பர்!

வானதியின் கவிதைகள்

மார்கழி 1991

என் தேசமே!

மேஜர் பாரதி

என் இனிய தேசமே!

குறிப்பெடுத்துக்கொள்.

எரியுண்டு

சிதையுண்டு போன

என் தேசத்தின்

காப்பகழி ஒன்றில்

எழுகின்ற

உணர்வு அலைகளைக்

குறிப்பெடுத்துக்கொள்.

இந்தத் தேசத்தை

எப்படிநான்

நேசித்தேன் என்று

தெரியுமா உனக்கு?

கீழ்வானம் எமக்கு

எப்போது சிவக்கும்?

என் இதயத்தின் துடிப்பிது;

கேட்கிறதா உனக்கு?

என்னால்

விளங்கப்படுத்த முடியவில்லை

ஆனாலும்

என் தேசமே

கறிப்பெடுத்துக்கொள்.

இன்னும் என்

அம்மா என்ற பெயரில்

உயிரோடு உலாவும்

எலும்புக்கூட்டை நீ

கண்டிருக்கிறாயா?

ஆம்! கண்டிருப்பாய்

நடைப்பிணமாய் திரியும்

'அதன்' கால்கள்

நிச்சயம் உன்மடியில்

பதிந்திருக்கும்.

வாழ்வின்

பற்றுக்கோட்டினை

தேடி அலையும்

இந்த எலும்புக்கூடு

தினம் தினம் என் நினைவில்

வந்து போனாலும்

இன்னும் எதன்மீது

அன்பு செலுத்துகின்றேன்

தெரியுமா உனக்கு?

தெரிந்துகொள்

உன்மீது தான்!

இருண்டு போயிருக்கும்

என் தேசத்தில்

ஏற்றப்படும்

விடுதலைத் தீபத்திற்கு

என் உயிரும்

எண்யெய்யாய்

ஊற்றப்பட வேண்டும்!

குறிப்பெடுத்துக்கொள்

என் தேசமே

குறிப்பெடுத்துக்கொள்!

காதோடு சொல்லிவிடு

புரட்டாசி 1992

விடியல்வரை தொடருமா....?

நாமகள்

எங்கள் இரவுகள்

மட்டுமல்ல

பகல்களும்

இருண்டுபோயின

பதுங்கு குழிகளுக்குள்.....

இரவில் நிசப்தங்களைக்

கலைக்கும் 'ஷெல்'கள்

அதிர்வுகளுடன்....

முற்றத்துப் பனையின்

காவோலை கூட

ஒரு கணம் மௌனிக்கும்!

துயரங்களைச் சுமந்து

கழியும் நாட்கள்.....

தொடரும்

விடியல் வரைக்கும்!

எங்கள் பூமரங்களில்

வைகறையில் மலர்வதற்காகக்

காத்திருந்த மொட்டுக்கள்

மலரு முன்பே

பிய்க்கப்பட்டன.....

எமது நெஞ்சங்களில்

குருதி சிந்திய

யூலையும்

இரண்டுபோன

ஒக்ரோபரும்

துன்பங்கள் தொடர்ந்த

யூனும்

நெருடும் நினைவுகளாய்

என்றும் நிலைத்து நிற்கும்!

துயரங்கள்.....

ஏக்கங்கள்......

நம்பிக்கைகளுடன்

புழுதிபடிந்த

இந்த மண்ணும்......

கடலும்.....

காற்றும்....

எமதென்ற இறுமாப்பில்

நாங்கள்......

ஆனாலும்

இன்னும்சிலர்

தாங்கள் மட்டும்

அந்நியமாய்

முத்திரைச் சந்தையில்

முடிச்சுகளுடன்....

அகதி

அந்தஸ்திற்காக

தினம் தினம்

விமான நிலைய

வழியனுப்பல்கள்....!

விடியல் வரை

இதுவும் தொடருமா......?

ஈழநாதம்

11.1.1991

அன்னை நிலம்

கௌதமி

அம்மா

மன்னித்துவிடு-

இப்படிச் சொல்ல

எனக்கு விருப்பமில்லை

ஏனெனில் ஒரு

குற்றவாளியாகப்

பிரியவில்லையே நான்!

அப்படியாயின் - என்னை

மறந்து விடு.

அப்படிச் சொல்ல

எனக்கு அருகதையில்லை;

நினைக்கும் உரிமை

உனக்கேயானது!

அம்மா உனக்கு

உறக்கமே வருவதில்லையா?

எனக்காக ஏன்

விழித்தே இருக்கிறாய்?

நீயோ

என்னை மட்டு ம நேசிக்கிறாய்.

நானோ

என் தேசத்தை நேசிக்கிறேன்!

என்றும் போல்

வாசலில் நின்று

வழியைப் பார்த்து

நீ - என்

வருகையைத் தேடுவாய்;

என்னைப் போன்று

பலர் வீதியில்

போகலாம், வரலாம்.

அவர்களில் என்னைப்பார்;

இதேபோல்-

எங்கோ ஒரு தாய்

என்னில் தனது

குழந்தையைக் காணலாம்!

அம்மா

என் புத்தகங்களும்

கொப்பிகளும்

மேசையில் இருக்கின்றன.

கவனமாக எடுத்து வை.

சிலவேளை அதுவே

என்

ஞாபகச் சின்னமாகலாம்!

அக்காவின் பிள்ளைக்கு

நீ எனக்கு

முன்பு வாங்கித் தந்த

விளையாட்டுத் துவக்கை,

என் சார்பில்

கொடுத்து விடு;

அவன் அதைக்

கையாளப் பழகட்டும்!

அம்மா!

அழுகின்றாயா வேண்டாம்.

நான்

மீளவில்லையெனில்

என் படத்துக்கு ஒரு

முத்தம் கொடுப்பாயல்லவா....

ஏனெனில் என்றுமே - நான்

உனக்குக் குழந்தைதான்!

பிறந்த மடியைப் பிரிந்தபோதும்

தவழ்ந்த மண்- என்னைத்

தழுவிக் கொள்ளும்;

மண் மடியில் - என்னை

வைத்து நில அன்னை

தாலாட்டுப் பாடுவாள்!

பாலில் வீரம் ஊட்டிப்

பருகிய தாயே,

என்

புனிதப் பாதை தவறா?

நீயே யோசி.

காலம் உதிரும்

கண்­ர் மறையும்

வரலாறாய் என்

வாழ்வு தொடரும்!

உனக்கும் எனக்கும்

இருந்த உறவு

தொப்புள் கொடியுடன

அறுந்து போக,

எந்தன் உறவோ

புதைகுழி வரையும்

போகும் பாரம்மா!

சுதந்திரப் பறவைகளை

ஆனி 1992

நல்லதொரு விடுதலை

நாமினிக் காண்போம்!

இராஜி சண்முகநாதன்

ஆமி வர விடுவோமா?

ஆர்த்தெழுவோமம்மா-எம்

பூமி பறி போக நாமும்

பொறுப்பதுவோ சும்மா?

மாமி, மகன், மச்சான், சித்தி

மண் மீட்க வந்தார்

மாவீரம் கொண்டு நாம்

மாற்றான் படை எதிர்ப்போம்.

கிட்டமிகு வந்து விட்டான்

கிளர்ந்தெழுவோம் பெண்ணே,

பட்டதுயர் போதும் இனிப்

பாயும் புலியாவோம்.

சிட்டுக்களாய் நாம் சிரித்து

சிறகடித்துப் பறக்க

எட்டும் தூரம் இல்லை, இன்றே

எதிரி எல்லை செல்வோம்.

வண்டுபோல போர் விமானம்

வட்ட மிட்டுச் செல்லும்

குண்டு விழும், நிலை குலையோம்.

குறிவைத்து நிற்போம்.

துண்டு படும் உடலங்கள்

துடியிடையில் வீரம்

கண்டு கொண்டோம், களமெமக்கு

கற்கண்டுச் சோலை

வீங்குபுயம் கொண்ட வேங்கை

விறல் வீரன் எம் தலைவன்

ஓங்கு புகழ் பிரபாவின் உறுதியிலே நாங்கள்

சங்கெடுத்து முரசொலித்து அணியாக நிற்போம்.

சங்கமமாய்ச் சமர்க் களத்தில்

சண்டை செய்து வெல்வோம்.

மாங்குயிலும் பூங்குயிலும் மாவீரம் காண,

மண்மீட்டு அரசமைப்போம் புதுயுகம் காண்போம்.

பூட்டுக்குள் உணர்வலைகள் பூட்டியது போதும்

பொன்மனத்தைச் சீதனத்தால் வருத்தியது காணும்,

ஏட்டுக்கும் எழுத்துக்கும் கற்பனைக்குமாகி,

எண்ணற்ற துயரங்கள் ஏற்றதினிப் போதும்.

முட்டையிடும் கோழியெனக் குஞ்சுகள் காத்து,

முழுநாளும் வீட்டுக்குள் முனகியது போது ம.

நாட்டுக்கு நம் பங்கு சரிபாதி கொண்டோம்;

நல்லதொரு தமிழீழம் நாமினிக் காண்போம்!

காட்டுக்குள் நாம் கண்ட வீரமெல்லாம்

கட்டுடைத்த பெண்ணடிமை வெற்றியன்றோ - தமிழ்

நாட்டுக்குள் இனவெறியர் இனி நுழைந்தால்,

நாற்றிசையும் நடுநடுங்க வேட்டுக்கள் கேட்கும்.

தட்டுங்கள் போர்க்கும்மி, தாண்டுங்கள் தடைகள்;

தன்மானம் கொண்ட தமிழர்கள் நாமிணைந்தால்,

ஆட்டும் அரசபடை அஞ்சியே ஓடிவிடும்.

ஆரணங்கே துயிலாதே, அணிசேர்ந்து வந்திடுவாய்!

சுதந்திரப் பறவைகள்

ஆனி 1992

உயிர்ப் பொருள்

கி. சிவஞானம்

கொழும்பிலிருந்து வருகையிலும்

இடைமறித்தாய்.

'திற!

கொட்டு" என

அதட்டுகிறது உன் குரல்.

தட்டும்

தேடும்

தூக்கி எறியும்

உன் கொலைக் கைத்தடி.

தெருவின் நடுவே

'குட்டித் தங்கச்சி'யின் அப்பிளும்

அம்மாவின் வெள்ளைச் சேலையும்

என் சந்தியாவின் திருக்குறளும்....

கவியலாய்.....சிதையலாய்......

நான் விலை கொடுத்து வாங்கியதில்

என் அனுமதியின்றி நீ எடுத்தபின்

எஞ்சியதை,

"அள்ளு

அடை, அவசரமாய்த் தூக்கு

ஓடு ஓடு...."

என்று விரட்டுவாய்.

வெற்றி வீரனாய் நீ;

வேகும் மனதுடன் நான்.

கூனிக் குறுகி

குட்டுப்பட்டு நிமிர்கையில்

அப்பிளும், வெள்ளைச் சேலையும்,

திருக்குறளும்

என்னை எனக்குள் நிறுத்தின.

என்

விதவை அம்மாவும்

குட்டித் தங்கச்சியும்

சந்தியாவும்

என்னுள் தீ மூட்ட,

ஏளனமாய்

உன்னைப் பார்த்தபடி,

'இனிமேல் என்னையும்

தடைசெய்யப் பட்ட பொருளாக்கு'

என்றபடி என்

கால்கள் விரையும்-

என் தேசத்தை நோக்கி!

வெளிச்சம்

மார்கழி 1992

உனக்கேன் அச்சன்!

முருகு இரத்தினம்

உனக்கே னச்சம் சாவது ஒருநாள்

சஞ்சலம் விடுமனமே

தினமும் என்னைத் தூண்டித் தூண்டி

திகைத்து மயங்குகிறாய்

இனத்தின் பெயரால் நடக்கும் கொடுமை

இனியும் பொறுத்திடவோ

கணப்பொழு தேனும் கலங்காதிருப்பாய்

கவலை உனக்கேனோ?

மான மிழந்து மதியு மழிந்து

மண்ணில் வாழ்ந்திடவோ

ஈன ரெங்கள் ஈழமண்ணில்

என்றும் ஆண்டிடவோ?

கூனற் பிறவி போல விங்கே

கூனிக் குறுகிடவோ?

தானம் செய்வேன் உயிர்மண் மீட்க

தளரா திருமணமே!

வான மீதில் வந்திடும் "வண்டுகள்"

வாழ்வை முடித்திடலாம்

சீனச் "சகடைகள்" சிதறிடும் தீயில்

செத்து மடிந்திடலாம்

வீணரின் தடைகள் மிகுந்து பசியில்

வெந்து மடிந்திடலாம்

காண வேண்டும் தமிழர் விடிவே

கலங்கா திருமனமே!

கிழவய தாகிலும் கனன்றது உணர்வு

கிளர்ந்தெழு என்மனமே

களமதை நோக்குது கைகளில் ஆயுதம்

காப்பது என்கடனே

வளமிகு பூமியில் வல்லா திக்கம்

வலுத்திட விடுவேனோ

பழமிது வீழ்ந்தால் பயிராய் முளைக்கும்

பதறா திருமனமே!

காலம் எனக்கும் கட்டடையிட்டது

களைந்திடு விலங்கென்றே

ஞாலமும் ஒருநாள் நன்கு விளங்கிடும்

நியாயப் பணியென்றே

ஏலவே நானும் எண்ணி இருந்திடில்

எனக்கே னடிமை நிலை

ஓலமிடாது என்வழி தெளிந்து நின்றிடு

ஒரு நாள் விடிவுவரும்!

வெளிச்சம்

வைகாசி 1993

அம்மா நீயும் அழுவதை நிறுத்து!

ஆதிலட்சுமி இராசையா

சும்மா மூலையிற் சோம்பிக் கிடந்து

அம்மா நீயும் அழுவதை நிறுத்து!

சின்னவன் எனினும் சிறுத்தைதான் நானும்

சிந்துவேன் குருதி சுதந்திரம் காக்க

அனுதினம் எங்களை அகதியாய் ஆக்கும்

அந்நியர் அவர்களை அடித்து விரட்டுவேன்.

பொன்னும் பொருளும் பொசுங்கிப் போயினும்

பொன்னுடல் பூமியில் புழுத்து நாறினும்

மின்னிய எங்கள் வீரம் சாகாது

சொந்த மண்ணிலே சோகங்கள் மலிந்த பின்

பந்தம் என்னிலே பற்றிப் படருமோ?

விடுதலைத் தீயிலே வெந்துபோய் விட்டநம்

வீரப் புதல்வரின் வழியிலே நடப்பேன்.

இளைப்பின்றி நானும் இருளிலே நடப்பேன்-

முடிவிலே எனக்கொரு விடிவுண்டு என்பதால்!

ஈழமுரசு

26.7.1987

ஒத்திகை

மா.மயிலன்

விளையாட்டுத் துவக்குடனும்

வீரத்துடிப்புடனும்

எதிரியை

அழிப்பதாய் அவர்கள்

படை எடுப்பார்கள்

வானத்தில்-

ஏதும் கறுப்புகளைக்

கண்டுவிட்டால்

பொம்மர் வருவதாய்

பதுங்கிச் சுடுகிறார்கள்.

ஓ.....

அந்தச் சிறுவர்கள்,

நாளை

எதிரியைக் களத்திலாட

இன்று

ஒத்திகை செய்கிறார்கள்!

உனக்குத் தெரிகிறதா.....

அந்தச் சின்னஞ்சிறு

விழிகளுக்குள்

ஒரு நாடு தெரிவதை....?

வெளிச்சம்

சித்திரை 1993

எப்படிச்

சாத்தியமானது....?

தூயவன்

தூரத்தே

அசைந்தாடும் பனையிலே

காயும் பழமும்

ஒரே மாதிரியாக

குலைகுலையாகக்

காய்த்துக் கிடக்கின்றன....

ஓ!

அடுத்த வருடமும்

நிறைகின்றதா?

நம்ப முடியவில்லை!

நாற்பது நாளிலேயே

எங்கள் கதை

முடிந்து விடுமென்று

இரவுபகலாய்

ஏங்கி அழுத நாட்கள்!

ஐயோ!

கோதுமையும் இல்லை

சவர்க்காரமும் இல்லை

எல்லமே தடையாமே!

இனி

உயிர் வாழ்வது

நிச்சயமில்லை

என்று கதறி அலைந்து,

அழுது திரிந்த நாட்கள்!

அலையெல்லாம்

போய்த் தொலைந்து

இரண்டு வருடம் ஆனதா?

நம்பத்தான் முடியவில்லை!

எங்கள் நிலத்தை

எங்கள் வளத்தை

மறந்து

அழுது குழமறிய

நாட்கள்......!

குட்டக் குட்ட

குனியப்

பழகிப் போயிருந்த

நாங்கள்......

நிமிருதல் என்பது

எப்படிச் சாத்தியமானது.......?

மக்கட் புரட்சியோடு

பசுமைப் புரட்சியும்

கலந்து விளைந்திட

ஆசை கொண்ட,

இந்த விளை நிலத்தின்

வித்துக்கள் விழுதுகளின்

உந்துதலில்-

அவர்களின்

விழுகையில் நான்-

இந்த எழுகை

என்பது

சாத்தியமானதா?

நிமிர்வு

சித்திரை 1993

**முற்றும்**